பிரதமர் மோடி பெருமிதம் ஆயுத உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டுகிறது

புதுடெல்லி: ஆயுத உற்பத்தி, ராணுவ ஏற்றுமதி மற்றும் நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் நேற்று கூறியதாவது: இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. நமது துணிச்சலான வீரர்களின் அசாத்தியமான வீரத்தை நினைவூட்டுகிறது.

இன்றைய இந்தியா தனது வீரர்களை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், அவர்களின் வீர வரலாற்றை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்கிறது. அந்த உணர்வுடன் இந்த ஆண்டு வீர வெற்றி யாத்திரைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வீரர்களின் துணிச்சலுக்கு இணையாக, இந்தியாவும் தனது தொழில்நுட்ப திறன்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, ஐஎன்எஸ் மகேந்திரகிரி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

இந்த நவீன போர்க்கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இது தற்சார்பு இந்தியா திட்டத்தின் வளர்ந்து வரும் வலிமையின் அடையாளமாகும். நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த மாதத்தில் பினாகா நீண்ட தூர ராக்கெட்டை வெற்றிகரமாக சோதித்தது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு குஷா ஏவுகணையும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது போல, ஆயுத உற்பத்தி, ராணுவ ஏற்றுமதி, நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு என எதுவாக இருந்தாலும் இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது. வரும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் நெசவாளர்களை கவுரவிக்க அனைவரையும் வலியுறுத்துகிறேன். உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் உணர்வை நாம் மேலும் வலுப்படுத்துவோம். இவ்வாறு கூறினார்.

* மழைநீரை சேமிப்போம்
கடந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில், ஜல் சக்தி அமைச்சகத்தின் மழைநீரை சேமிப்போம் இயக்கத்தில் மக்கள் பங்கேற்க வலியுறுத்தியிருந்தது குறித்து பிரதமர் மோடி நேற்று குறிப்பிடுகையில், ‘‘மழைநீர் சேமிப்போம் இயக்கத்தில் கிராமங்கள், நகரங்கள், பஞ்சாய்த்துகள் மற்றும் சமூக அமைப்புகள் என அனைத்து இடங்களில் இருந்தும் மக்கள் பெருமளவில் பங்கேற்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு சொட்டு நீரும் வருங்கால சந்ததியினருக்கு சிறந்த சொத்தாக அமையும்’’ என்றார்.

Related Stories: