வாகனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும் ‘வி2வி’ வசதி: சாலை விபத்துக்களை குறைக்க ஒன்றிய அரசு புதிய திட்டம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2025ல் 5 லட்சத்து 13,563 சாலை விபத்துக்களில் 1 லட்சத்து 83,382 பேர் உயிரிழந்தனர். அதாவது தினமும் சராசரியாக 502 பேர் விபத்தில் பலியாகின்றனர். சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, சாலை பாதுகாப்பை மேம்படுத்த ‘விடூவி’ என்ற வாகன தகவல் பரிமாற்ற வசதியை கட்டாயமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான ஒன்றிய அரசின் வரைவு விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வாகனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும் விடூவி வசதி வரும் 2027 அக்டோபர் முதல்வர் தயாரிக்கப்படும் எல்,எம், என் வகை வாகனங்களில் பொருத்த வேண்டும்.

இந்த வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் கருத்துக்களை கூடுதல் செயலாளர்(எம்.வி.எல், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு), சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், போக்குவரத்து பவன், புதுடெல்லி- 110 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். comments-morth@gov.in என்ற இமெயிலிலுக்கும் கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

* எந்தெந்த வாகனங்களில்…
எல் வகை வாகனங்கள் – இரு சக்கர மூன்று சக்கர வாகனங்கள் (மொபட், பைக், ஸ்கூட்டர், ஆட்டோ)
எம் வகை வாகனங்கள் – பயணிகள் வாகனங்கள் (கார், ஜீப், வேன், பஸ்..)
என் வகை வாகனங்கள் – சரக்கு வாகனங்கள் (டெம்போ, பிக்கப், லாரி, டிரக்…)
மற்ற வாகனங்களுக்கு இது கட்டாயம் இல்லை.

* ‘விடூவி’ தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்

* ஒரு வாகனம் சாலையில் செல்லும் போது அருகில் உள்ள மற்ற வாகனங்களுடன் தானாகவே தகவல்களை பரிமாறிக்கொள்ளும். இதனால், அருகில் உள்ள வாகனத்தின் வேகம், அது எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பது குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும்.

* சாலை வளைவுகள் குறிப்பாக மலைப்பாதையில் உள்ள ஹேர்பின் வளைவுகளிலோ அல்லது மூடுபனி பொழியும் நேரத்திலோ எதிரே வரும், பின்னால் வரும் மற்ற வாகனங்கள் குறித்த எச்சரிக்கை தரும்.

* நெரிசல் குறையும்: வாகனங்கள் சீரான இடைவெளியில் செல்வதை உறுதி செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்.

* சிம் கார்டு இல்லாமல் இயங்கும்
விடூவி தொழில்நுட்பம் வாகனங்கள் நேரடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கும் ஒரு வயர்லெஸ் கருவி. இதன் மூலம், அருகிலுள்ள பிற வாகனங்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும். இதற்காக சிம் கார்டோ, மொபைல் நெட்வொர்க்கோ தேவையில்லை. இந்த கருவிகள் 5.875 – 5.905 GHz அலைவரிசையில் இயங்கும். இதற்காக 30 MHz ஸ்பெக்ட்ரத்தை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

Related Stories: