அமராவதி: ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவரான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் தனது எக்ஸ் பதிவில், ‘‘நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் பொறுப்புகூறலுக்கான முன்மாதிரியை உருவாக்கி உள்ளது. இப்போது ஆந்திராவிலும் அதே கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம்.
இங்கு மாவட்ட தேர்வுக்குழு நடத்திய ஆசிரியர் பணி நியமன தேர்வில் பல முறைகேடுகள் நடந்தன. அதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் பதவி விலகுவாரா? அல்லது பொறுப்புக்கூறலுக்கு பதிலாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மகன் லோகேஷை காப்பாற்றுவாரா?’’ என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு நேற்று பதிலளித்த அமைச்சர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘ சிலர் தார்மீக பொறுப்பு குறித்து பாடம் எடுக்கிறார்கள். ஆனால் அவர்களின் சுய செயல்பாடுகளோ முற்றிலும் மாறுபட்ட கதையை சொல்கின்றன’’ என பதவி விலகலை நிராகரித்துள்ளார்.
