- ஷவரன்
- Tirupathur
- சரவணன்
- நகர செயலாளர்
- அத்தமுகா
- காமராஜர்
- 34வது வார்டு
- திருப்பத்தூர் நகராட்சி
- பாச்சூர்
- ஏபி மாநில குப்பை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 34வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சரவணன், அதிமுக நகர செயலாளர். இவர் திருப்பத்தூர், பச்சூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பகுதிகளில் நகை வியாபாரம் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மதுரை, சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மதுரை பகுதியை சேர்ந்த பட்டறை சுரேஷ் என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருட்டு வழக்கில் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர், திருப்பத்தூர் அதிமுக நகர செயலாளர் சரவணனுக்கு சொந்தமான அடகு கடையில் திருட்டு நகைகளை அடகு வைத்ததாக கூறினார். அதன்பேரில் ஆந்திர போலீசார் 10 சவரன் நகையை சரவணனிடம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நகர போலீசார் மற்றொரு திருட்டு வழக்கில் பட்டறை சுரேஷை கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
அப்போது அவர், பங்காருபேட்டை பகுதியில் தான் திருடிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள 51 சவரன் நகையை சரவணனின் அடகு கடையில் கொடுத்ததாக கூறினாராம். அதன்பேரில் கர்நாடக போலீசார் சரவணனுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் சரவணன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருப்பத்தூர் காமராஜர்நகர் பகுதிக்கு வந்த கர்நாடக போலீசார் சரவணன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அவர் இல்லாத நிலையில் அவரது மகன் சந்துருவை பிடித்து விசாரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சரவணன் தரப்பு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கர்நாடகா போலீசார் கூறவே, திருப்பத்தூர் டவுன் போலீசார் வந்து பேசினர்.
சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது 51 சவரன் திருட்டு நகையை ஒப்படைக்க வேண்டும் அல்லது கர்நாடகாவில் ஆஜராகவேண்டும் என அம்மாநில போலீசார் கறாராக தெரிவித்தனர். இதையடுத்து வேறுவழியின்றி அதிமுக நகர செயலாளர் சரவணன் மற்றும் அவரது அண்ணன் கணேசன் ஆகிய இருவரும் ஆஜராக ஒப்புக்கொண்டனர். அவர்களை கர்நாடக போலீசார் கைது செய்து பங்காருபேட்டைக்கு அழைத்துச்சென்றனர்.
