- மீராபாய் சானு
- காமன்வெல்த் விளையாட்டு
- இந்தியா
- கிளாஸ்கோ
- மீராபாய் சானு
- 23 வது காமன்வெல்வெல்த்
- ஸ்காட்லாந்து
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தொடர்ந்து 3வது முறையாக தங்கப் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். மகளிர் 48 கிலோ எடை பிரிவு பைனலில் நேற்று பங்கேற்ற மீரா பாய் சானு (31 வயது), ஸ்நேட்ச் முறையில் முதல் முயற்சியாக 82 கிலோ எடை தூக்க முயன்றார். அதில் தோல்வியடைந்தாலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் 2வது முயற்சியில் 82 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கினார்.
3வது மற்றும் கடைசி முயற்சியில் அதை 85 கிலோவாக உயர்த்தியதுடன் அந்த சவாலையும் வெற்றிகரமாக சமாளித்து ஸ்நேட்ச் முறையில் புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து, கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் எடுத்த எடுப்பிலேயே 105 கிலோ எடையை தூக்க முயற்சித்த மீராபாய் சானு, முதல் முயற்சியில் தவறினாலும் அடுத்த முயற்சியில் அதை அநாயசமாகத் தூக்கி அசத்தியதுடன், ஸ்நேட்ச் + கிளீன் மற்றும் ஜெர்க்கில் மொத்தமாக 190 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கத்தை தொடர்ந்து 3வது முறையாக முத்தமிட்டார்.
நைஜீரியாவின் ரூத் அசுகுவோ என்யோங் 168 கிலோ தூக்கி (75 கி. + 93 கி.) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், மலேசியாவின் ஐரின் ஜேன் ஹென்றி 167 கிலோ (77 கி. + 90 கி.) வெண்கலமும் வென்றனர். மீராபாய் ஏற்கனவே 2018 கோல்டு கோஸ்ட் (ஆஸ்திரெலியா, 48 கிலோ எடை பிரிவு), 2022 பர்மிங்காம் (இங்கிலாந்து, 49 கிலோ எடை பிரிவு) காமன்வெல்த் போட்டித் தொடர்களில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது ஹாட்ரிக் சாதனையால், நடப்பு தொடரில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதுடன் பதக்க பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது. ஒலிம்பிக்சில் ஒரு வெள்ளி, உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், 2 வெள்ளி வென்றுள்ள மீராபாய் மணிப்பூர் காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றுவதுடன் பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
