புதுடெல்லி: வினாத்தாள் கசிவுகளை தடுக்கும் வகையில், தேசிய தேர்வு முகமையின் தேர்வு நடைமுறையிலும் கல்வியிலும் தொழில்நுட்பம் சார்ந்த அடுத்தகட்ட சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் வீடியோவில் நேற்று அறிவித்தார். நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய 36 நாள் தொடர் போராட்டத்தை தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார்.
இந்த விவகாரத்தில் மாணவர்கள், இளைஞர்கள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, வினாத்தாள் கசிவை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அறிவிப்பில் கூறியதாவது: மாணவர்களின் எதிர்காலத்திற்காக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறையில் வாடுகிறார்கள். நாங்கள் விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம்.
நாடாளுமன்றத்திலும் கடுமையான விதிகளை கொண்ட புதிய சட்டத்தை இயற்றுவதற்கான நடவடிக்கைகளை நாளை (இன்று) மேற்கொள்ள உள்ளோம். ஆனால் நாம் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நமது கல்வி முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப்பயன்படுத்துவதாகவும் அமைய வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தேர்வு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும் வகையில், புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், நமது தேர்வு முறையை மேலும் நம்பகமானதாக மாற்றுவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார். பிரதமர் மோடி அறிவித்த உயர்மட்ட குழு, தேசிய தேர்வு முகமையின் தேர்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்படி பல முக்கிய சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவில், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத், முன்னாள் ஐபி இயக்குநர் தபன் தேகா, ஐஐடி சென்னை இயக்குநர் வி. காமகோடி, கல்வித்துறை முன்னாள் செயலாளர் அனிதா அகர்வால், லாஜிஸ்டிக்ஸ் நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த பிறகு பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் வீடியோவில் தோன்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது இது 3வது முறை.
இதற்கிடையே பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் வெளியிட்ட பதிவில், ‘‘மாண்புமிகு பிரதமரே, சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு, நீட்-யுஜி வினாத்தாள் கசிவு ஊழலுக்குப் பிறகு, ஜூன் 2024-ல் அமைக்கப்பட்ட கே. ராதாகிருஷ்ணன் குழுவின் தற்போதைய நிலை குறித்து நாட்டுக்கு விளக்குங்கள். அந்த குழு சமர்ப்பித்த 184 பக்க அறிக்கையின் நிலை என்ன?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
* உயர்மட்ட குழுவில் இடம் பெற்றவர்கள்
* நந்தன் நிலேகனி (இன்போசிஸ் இணை நிறுவனர்)
* எஸ். சோம்நாத் (இஸ்ரோ முன்னாள் தலைவர்)
* தபன் தேகா (உளவுத்துறை முன்னாள் இயக்குநர்)
* வி. காமகோடி (ஐஐடி சென்னை இயக்குநர்)
* அனிதா அகர்வால் (கல்வித்துறை முன்னாள் செயலாளர்)
* அம்ரித் லால் மீனா (லாஜிஸ்டிக்ஸ் நிபுணர்)
* வினாத்தாள் கசிவை தடுக்க மசோதா இன்று தாக்கல்
வினாத்தாள் கசிவை தடுக்க, பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. டெல்லி ஜந்தர்மந்தரில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி இந்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை நிறைவேற்ற, மக்களவையில் இன்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்ய உள்ளதை மக்களவை செயலகம் உறுதி செய்துள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் தண்டனை காலம் 3 முதல் 5 ஆண்டுகளில் இருந்து, 5 முதல் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
மேலும் அவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகை 10 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக அதிகரிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே போல, குழுவாக தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகவும், குறைந்தபட்ச அபராதம் 1 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
