×

மாணவர்கள் போராட்டத்தின் போது உயிரை பறிக்கும் தாக்குதலை நடத்த அனுமதி தந்தது நீங்களா? அமித்ஷாவிடம் ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: ‘டெல்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட உயிரைப் பறிக்கக் கூடிய பலத்தை மேற்கொள்ள அனுமதி அளித்தது நீங்களா?’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி கேட்டுள்ளார். டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசி பெல்லட் துப்பாக்கிளை பயன்படுத்தி விரட்டியடித்தனர்.

இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 20ம் தேதி டெல்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பொறுப்புகூறலை வலியுறுத்தி இந்த கடிதத்தை எழுதுகிறேன். நியாயமான, பொறுப்புள்ள கல்வி முறையை எங்கள் மாணவர்கள் கோரி வந்தனர்.

அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு பதிலாக, பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது கண்மூடித்தனமான பலப்பிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் உயிரைப் பறிக்கக் கூடிய ஆயுதங்கள், கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர். மாணவிகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அவர்களின் பிறப்புறுப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உயிரை பறிக்கக் கூடிய பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பத்திரிகையாளர் ஒருவர் உட்பட பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பது ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் தெளிவாக தெரிகிறது. பெல்லட் துப்பாக்கி சூட்டுக்கு ஆளானதால் 19 வயது மாணவர் சாஹில் லோச்சாப் ஒரு கண்ணை இழக்கும் அபாயத்தில் உள்ளார். அவரை நான் சந்தித்தேன்.

டெல்லியில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு படையினர் உங்களுக்குதான் பதிலளிக்க வேண்டியவர்கள். எனவே நான் கேட்கிறேன், உள்துறை அமைச்சர் என்ற முறையில், மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட உயிரைப் பறிக்கக் கூடிய பலப்பிரயோகத்தை பயன்படுத்த நீங்கள் அனுமதித்தீர்களா? இல்லையென்றால், யார் அனுமதித்தது? சீருடை இல்லாமல், சாதாரண உடையில் மாணவர்களைத் தடிகளால் தாக்கும் நபர்கள் காவல்துறையினரா அல்லது தன்னார்வலர்களா? அவர்களை அங்கு பணியமர்த்தியது யார்?

எந்தவொரு ஜனநாயகத்திலும் அமைதியான போராட்டம் மிக முக்கியமானது. போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதும், பேச்சுவார்த்தை மூலம் அவர்களின் குறைகளைத் தீர்ப்பதும் அரசின் பொறுப்பு. இத்தகைய கொடூரமான வன்முறை அனைத்து நெறிமுறைகளையும் தகர்ப்பதுடன், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும் பதில்களையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றனர். அவர்களின் குரல் நிச்சயம் கேட்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி கேள்விகள் எழுப்பி உள்ளார்.

Tags : Delhi ,Rahul Gandhi ,Amit Shah ,New Delhi ,Lok Sabha ,Union Home Minister ,
× RELATED தேர்வில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள...