தூத்துக்குடியில் கோலாகலம்; தூய பனிமயமாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலயத்தின் 444வது திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு பனிமய அன்னையின் 444வது திருவிழானை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி அளவில் திருச்சிலுவை சிற்றாலயம் முன்பிருந்து தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு மரியவளன் தலைமையில் கொடிபவனி தொடங்கியது. பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் இன்று ஏற்றிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் பவனியாக எடுத்துச் சென்றனர்.

இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45க்கு 2ம் திருப்பலியும் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு கொடியேற்ற சிறப்பு திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடந்தது. பின்னர் காலை 8.55 மணிக்கு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தையர்கள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றி வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டு, ஆயிரக்கணக்கான பங்கு இறைமக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அப்போது உலக சமாதானத்திற்காக 100 புறாக்கள், பலூன்கள் பறக்க விடப்பட்டன. மேலும் பழைய துறைமுகத்திற்குள் இழுவை கப்பலில் இருந்து சைரன் ஒலிக்கப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு பங்குத்தந்தையும், தூத்துக்குடி, செயின்ட் தாமஸ் ஆங்கில பள்ளிகள் நிதி நிர்வாகியுமான ஸ்டார்வின் அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தார். திருவிழா நாட்களில் சிறப்பு திருப்பலிகளும், ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறையுரை ஆகியன நடக்கிறது.தொடர்ந்து வரும் 5ம்தேதி அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழ தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள். சிறு குழந்தைகளை பெரியவர்கள் கையில் தூக்கி சென்று கொடிமரத்தின் முன்பு உட்காரவைத்து கொண்டு சென்றனர். மாணவ மாணவியருக்கான பள்ளி பொருட்கள் கொடி மரத்தில் வைக்கப்பட்டன. திருமண வரம், குழந்தை வரம் வேண்டி பெண்கள் மாதுளை பழங்களை பனி மயமாதா காலடியில் வைத்து ஆசி பெற்று எடுத்து சென்றனர்.

ஆக.5ல் பொது விடுமுறை
பனிமயமாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 5ம்தேதியன்று மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: