சென்னை: தங்கம் விலை சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் இருந்து ஏற்றத்தை கண்டு வந்தது. கடந்த திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,200க்கு விற்றது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,760க்கும், புதன்கிழமை பவுனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7,440க்கும் விற்றது.
நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.13,500க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து பவுன் ரூ.1, லட்சத்து 8000க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 4 நாளில் பவுனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்தது. இந்த விலை அதிகரிப்பு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் அதிரடியாக சரிவை சந்தித்தது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,840க்கும் விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
