வீடியோ பார்க்க விரும்பவில்லை, நேரமும் இல்லை டெல்லி தடியடி விவகாரம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு

புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க கோரியதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். டெல்லி தடியடி வீடியோவை பார்க்க எங்களுக்கு நேரமில்லை, விருப்பமும் இல்லை’’ என காட்டமாக பதிலளித்தார்.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீசார் கடும் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக நேற்று ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், டெல்லி தடியடி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், ‘‘காவல்துறையின் அத்துமீறல்கள் தொடர்பான வீடியோக்கள் உள்ளன. இந்த வழக்கை நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா? மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் மனுவில் அவர்களின் 3 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன’’ என வழக்கறிஞர் கூறினார்.

இந்த கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி, ‘‘எங்களுக்கு வீடியோவில் ஆர்வமில்லை. அவற்றை பார்க்க நேரமும் இல்லை. நாங்கள் எந்த வீடியோவையும் பார்க்க விரும்பவில்லை’’ என்றார். மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை பற்றி மீண்டும் வலியுறுத்திய வழக்கறிஞர் வீடியோவை பற்றி குறிப்பிட்ட போது கடுப்பான தலைமை நீதிபதி, ‘‘எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். எந்த வீடியோவையும் நாங்கள் பார்க்க விரும்பவில்லை’’ எனக் கூறி மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டார்.

 

Related Stories: