டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போரட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த போராட்டங்கள் மிகுந்த கவலையளிப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நமது நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சிலர் அரசியல் கருவியாக பயன்படுத்தி தங்கள் அரசியல் நலன்களை நிறைவேற்ற முயற்சிப்பது மிகவும் வருந்தத்தக்கது. பிரதமர் மோடி தலைமையிலான எங்கள் அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
நமது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் எதிர்க்கட்சியினரால் உருவாக்கப்பட்ட கோப உணர்வு குறிப்பாக நமது மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குழப்பி, தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சியாக இருக்கிறது என்பதே உண்மை. இளைஞர்களின் உணர்வுகள் மற்றும் கவலைகளை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் அர்த்தமுள்ள விவாதங்களை நாடாளுமன்றத்தில் நடத்த அரசாங்கம் விருப்பம் தெரிவித்த போதும், எதிர்க்கட்சிகள் தெருக்களில் இறங்கி பிரச்சினைகளை தீர்க்க முயற்சியை மேற்கொள்கின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.
பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை எதிர்க்கட்சிகளுக்கு இருந்தால், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் சுமூகமான செயல்பாட்டை சீர்குலைக்காமல், நாடாளுமன்றத்திற்குள் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க ஒத்துழைத்து நாட்டின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என ராஜ்நாத் சிங் கேட்டு கொண்டுள்ளார்.
