சென்னை: ‘தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்’ என தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ” இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.
ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.
இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்!” என தெரிவித்துள்ளார்.
