திருவண்ணாமலை: திருவண்ணாமலை விளையாட்டு விடுதியில் இருந்து பள்ளிக்கு 108 மாணவிகளை ஒரே பஸ்சில் அழைத்து சென்றதால் கடும் நெருக்கடியால் தவித்தனர். திருவண்ணாமலையில் அரசு விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் 110 மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதியில் இருந்து தனியார் பள்ளிக்கு மாணவிகளை பஸ்சில் ஏற்றிச்செல்வது வழக்கம். அதிக மாணவிகள் இருப்பதால் மாணவிகளை தினமும் 2 குழுவாக பிரித்து அழைத்து செல்வது வழக்கம்.
சில நேரங்களில் அனைத்து மாணவிகளையும் ஒரே நேரத்தில் பஸ்சில் நெரிசலுடன் அழைத்துச்சென்றுள்ளனர். அதேபோல் இன்று காலை விடுதியில் இருந்து 108 மாணவிகளை ஒரே நேரத்தில் பஸ்சில் அழைத்துச்சென்றுள்ளனர். இதனால் மாணவிகள் நிற்ககூட இடமின்றி கடும் நெருக்கடியுடன் பள்ளிக்கு சென்றனர். இதனை அருகில் இருந்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
