×

7 மணி நேரம் மின்தடை துணை மின்நிலையம் முற்றுகை: ​வாணியம்பாடியில் பரபரப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் 7 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம்,​ வாணியம்பாடி அடுத்த தேவதானம், பழைய வாணியம்பாடி, செட்டியப்பனூர், ஜனதாபுரம், வன்னிய அடிகளார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை சீரான மின்சாரம் வழங்காமல், அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இரவிலும் மின் வெட்டு தொடர்ந்தது. சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக, நள்ளிரவு வரை நீடித்தது.

இந்நிலையில் இரவிலும் மின்வெட்டு ஏற்பட்டதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தூங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். ​இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நள்ளிரவு வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழைய வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள துணை மின் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். மேலும் அங்கிருந்த அதிகாரியிடம், ‘ஏன் இதுவரை மின்சாரம் வழங்கவில்லை’ எனக்கேட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : ​Vaniyambadi ,Vaniyambadi ,Tirupattur district ,Devadahanam ,Old Vaniyambadi ,Chettiyappanur ,Janathapuram ,Vanniya… ,
× RELATED ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள்...