பெரம்பலூர், ஜூலை. 15: பெரம்பலூரில் தொகுப்பூதிய நியமனங்களைக் கைவிடக்கோரி, பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுப்பூதிய நியமனங்களை கைவிட வேண்டும். ரீ டிப்ளாய்மெண்ட் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் பிரியா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஆனந்த் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை பேசினர். முடிவில் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சத்யபிரியா நன்றி தெரிவித்தார்.
