கிருஷ்ணகிரி, ஜூலை 15: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, சின்ன ஏரியை அழகுபடுத்தும் திட்டம் விரைவில் துவங்கிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சுற்றுலா தலங்கள் இல்லாத நிலையில், ஏரியை அழகுபடுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அருகில் மாநில எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இங்கு வசிப்பவர்கள், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் செல்லும் வகையில், சுற்றுலா தலங்கள் அதிகளவில் இல்லை. கிருஷ்ணகிரி பகுதி மக்கள், கே.ஆர்.பி. அணைக்கு செல்கிறார்கள். அதேபோல் சிறுவர், சிறுமிகளின் பொழுது போக்கு இடமாக அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லங்களுக்கு செல்கின்றனர்.
பெரியவர்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு செல்கின்றனர். நகரில் இருந்து, மாவட்ட விளையாட்டு அரங்கம் நீண்டதொலைவில் உள்ளதால், அங்கு செல்ல தயங்குகின்றனர். இதனால் நகரில் உள்ளவர்கள் பைபாஸ் சாலைகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையத்திற்கு அருகில், 16.10 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரியை புனரமைத்து, அழகுப்படுத்திட வேண்டும் என்றும் ஏரிக்கரையை பலப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ள பாதை தளம், படகு இல்லம் போன்றவை அமைத்திட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அந்த ஏரியை புனரமைத்து, நடைபாதை விளக்குகளுடன் இருக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டடு, அதற்கான பூமி பூஜையும் நடந்தது. இதையடுத்து ஏரியை ஆழப்படுத்தி, ஏரியை சுற்றி இரும்பு கம்பி முள்வேலி அமைக்கப்பட்டது. ஏரியில் உள்ள ஆகாய தாமரை செடிகளும் அகற்றப்பட்டது. அத்துடன் பறவைகள் வந்து தங்கிட ஏரியின் நடுவில் மண்குட்டைகள் அமைக்கப்பட்டு, மரங்களும் நடப்பட்டது.ஆனால், இந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீண்டநாட்கள் ஆகியும் அந்த திட்டம் இதுவரை முழுமை அடையவில்லை. எனவே கிருஷ்ணகிரி சின்ன ஏரியை புனரமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகரில் மையப்பகுதியில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை புனரமைத்து, நடைபாதை அமைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அமர இருக்கைகள், விளக்கு வசதி உள்ளிட்ட வசதிகள் செய்ய வேண்டும். இதற்காக அதிகாரிகள் அளவில் ஆய்வு பணிகள் நடந்தன. அதன் பிறகு அந்த திட்டம் கிடப்பில் உள்ளது. எனவே ஏரியை புனரமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும். இந்த திட்டம் நிறைவேறினால் நகர மக்களுக்கு பயன்படுவதுடன், புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில், இந்த பகுதியில் அமர்ந்து பொழுதை போக்க வசதியாகவும் இருக்கும்.
மேலும், புதிய பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ளவர்கள், தங்கள் கடைகளில் விழும் குப்பைகளை சேமித்து, இரவு நேரங்களில் ஏரியில் கொட்டிவிடுகின்றனர். இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் மாசடைவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
