×

மதுரை, மேலூர் குறு வட்ட போட்டிகளில் அரசு, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம்

மதுரை, ஜூலை 14: மதுரை மாவட்ட குறு வட்ட போட்டியில் அரசு, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்று அசத்தினர்.மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை, மேலூர் கல்வி மாவட்டங்கள் 14 குறுவட்டங்களை உள்ளடக்கியது. இதில் அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, சமயநல்லூர், அழகர்கோவில், யா.ஒத்தக்கடை, கருப்பாயூரணி மற்றும் மேலூர் குறுவட்டங்களில் கேரம், பீச் வாலிபால் மற்றும் டென்னிக்காய்ட் போட்டிகள் நடந்து முடிந்தன. தெப்பக்குளம், மஹால், ஆரப்பாளையம், திருமங்கலம், திருநகர், அவனியாபுரம், உசிலம்பட்டி மற்றும் டி.கல்லுப்பட்டி ஆகிய குறு வட்டங்களுக்கான போட்டிகள் நேற்று துவங்கின.

இரண்டாம் கட்டமாக நடந்த குறு வட்டப்போட்டி துவக்க விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் தயாளன் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆய்வாளர் வினோத், எஸ்டிஏடி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர். மஹால் குறுவட்டத்திற்கு கோ-கோ போட்டியும், ஆரப்பாளையம், திருமங்கலம் குறுவட்டத்திற்கு பி.அம்மாபட்டி அரசு பள்ளியில் கால்பந்தும், திருநகர் மற்றும் அவனியாபுரம், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி குறுவட்டத்தில் கேரம் போட்டியும் நடந்தன. தெப்பக்குளம் குறுவட்டத்தில் குத்துச்சண்டை போட்டிகள் மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் பள்ளியில் நடந்தது. இப்பள்ளி மாணவன் ஆதியப்பன், ஹரிஹரசுதன், சிவசக்தி முதலிடம் பெற்றனர். மேலும் சமயநல்லூர் அரசு பள்ளி மாணவி கீர்த்தனா, ரோஜாலட்சுமி, காமலேஷ், சாய்சுகனாத் ஆகியோர் பல்வேறு எடைப்பிரிவுகளில் முதலிடம் பெற்றனர். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் யா.ஒத்தக்கடை குறுவட்டத்திற்கு சிறுவர்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

Tags : Government ,Madurai ,Melur ,School Education Department ,Alanganallur ,Chathirapatti ,Samayanallur ,Alagarkovil ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்