×

உரிமம் காலாவதியான நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 33 மது பார்கள் மேலும் 2 மாதங்கள் இயங்க அனுமதி

தஞ்சாவூர், ஜூலை 13: உரிமம் காலாவதியான நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 33 மது பார்கள் மேலும் 2 மாதங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் 130 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுடன் இணைந்து 33 பார்களுக்கு உரிமங்கள் அளிக்கப்பட்டு, அங்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த பார்கள் தனியார் உரிம ஒப்பந்த அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தன. இந்தநிலையில், மதுபார் நடத்துவதற்கான உரிமங்கள் கடந்த மாதம் (ஜூன்) 30ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன. அதன் பிறகு பார்களை தொடர்ந்து நடத்த அனுமதி இல்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் மதுபான பார்கள் கடந்த 1ம் தேதி முதல் மூடப்பட்டன.

இதனால் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பாகவும், சாலையோரங்களிலும் மது அருந்தி வந்தனர். இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்தநிலையில் தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அனைத்து கடைகளுக்கும், பார் உரிமையாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மது பார்கள் மேலும் 2 மாத காலத்துக்கு செயல்பட காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதற்கான உரிமைத் தொகை, ஜி.எஸ்.டி.வரி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலக சான்று ஆகியவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thanjavur district ,Thanjavur ,TASMAC ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்