×

பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்து கொலை: தாய், கள்ளக்காதலன் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பச்சிளம் குழந்தையை ஏரியில் உள்ள சேற்றில் புதைத்து கொன்று விட்டு நாடகமாடிய தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே காணை குப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா(30). இவர்களுக்கு ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவதாக கர்ப்பமடைந்த சுதா பிரசவத்திற்கு கடந்த 7ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே அவருக்கு 2 கிலோ எடையில் அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென்று குழந்தையுடன் அவர் மாயமாகியுள்ளார். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சுதாவின் சொந்த கிராமத்திற்கு சென்று கிராம செவிலியர் மூலம் விசாரித்தபோது சுதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். குழந்தை எங்கே என்று கேட்டபோது, மருத்துவமனையில் இருந்து வரும் வழியில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதால், குழந்தையை புதைத்து விட்டதாக சுதா தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தால், மேற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து சுதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும், காணை பகுதியில் உடலை புதைத்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை சுதாவிடம் குழந்தையை புதைத்த இடத்தை காட்டுமாறு கேட்டும் சரியாக கூறவில்லை. மாறாக எரித்து விட்டதாகவும், சாலையோரம் வீசிவிட்டதாகவும், ஒருவரிடம் கொடுத்து விட்டதாகவும் அவர் முன்னுக்குப்பின் முரணாகவே போலீசாரை அழைக்கழித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனை மற்றும் காணை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, சுதாவை குழந்தையுடன் வாலிபர் ஒருவர் பைக்கில் அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து சுதாவிடம் கேட்டபோது, காணை குப்பத்தை சேர்ந்த ஆர்ட்டிஸ்ட் வேலை செய்து வரும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள கோகலிங்கம்(39) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுதாவை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இது குறித்து போலீசார் கூறியதாவது:

சுதாவின் கணவர் சென்னையில் வேலை செய்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்த சுதா தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்லும்போது, யோகலிங்கமும் தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் சுதா கர்ப்பமாகியதால், 5 மாதத்தில் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கருவை கலைக்க இருவரும் சென்றுள்ளனர். அங்கு கருவை கலைக்க மறுப்பு தெரிவித்ததால், சுதா தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.

கடந்த 7ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டபோது, உறவினர்களிடம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சுதா ஆட்டோவில் வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த யோகலிங்கம் காலை 11.20 மணிக்கு விழுப்புரம் அரசு மருத்தவமனையில் சுதாவை தனது மனைவி எனக் கூறி சேர்த்துள்ளார். 11.35 மணிக்கு சுதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் கிராம மக்களுக்கு தெரிந்தால் அவமானமாக இருக்கும் என கருதிய சுதா, யோகலிங்கத்திற்கு அன்றிரவு 7.30 மணியளவில் மொபைல் போனில் அழைத்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யாமல் குழந்தையை துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு இருவரும், பைக்கில் சென்றுள்ளனர்.

பின், காணை அடுத்த அகரம் சித்தாமூர் ஏரியில் குழந்தையை உயிருடன் தண்ணீருக்கு அடியில் சேற்றில் அமுக்கி புதைத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று மதியம் குழந்தை உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்து சுதா மற்றும் கள்ளக்காதலன் யோகலிங்கத்தை கைது செய்தனர். பச்சிளம் குழந்தையை உயிருடன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chachilam ,Viluppuram ,Vilupuram ,Suresh ,Chennai ,
× RELATED வியட்நாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட...