கொச்சி: மலையாள திரையுலகில் பெண்களுக்கு சமத்துவமின்மை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்து நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மலையாள திரையுலகில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த நடிகை பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை ஆகியவை பெண் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் (அம்மா) அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மூத்த நடிகைகளான ரேவதி மற்றும் பத்மபிரியா ஆகியோர் சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல், கண்ணியம், சம உரிமை மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்புடைமை ஆகியவற்றை தொடர்ந்து கோரி வந்த போதிலும், எங்களுக்கு புறக்கணிப்பும் அமைதியுமே பதிலாக கிடைத்தது. இந்த ராஜினாமா முடிவு என்பது ஏதோ ஒரு சம்பவத்திற்கு எதிராக அவசரமாக எடுக்கப்பட்டது அல்ல, மாறாக பல ஆண்டுகால யோசனைக்கு பின் எங்களின் சுயமரியாதையை காக்க எடுக்கப்பட்ட முடிவாகும்.
வருங்கால பெண் தலைமுறையினருக்கு பாதுகாப்பான மற்றும் சமத்துவமான சூழலை உருவாக்குவதே எங்களின் நோக்கம். சினிமாவுடனான எங்களது பந்தம் இந்த சங்கத்தின் பதவியை சார்ந்தது அல்ல’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
