*பசுமைக்கு திரும்பிய தோட்டங்கள்
மஞ்சூர் : நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இதுதவிர, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளன.
இந்நிலையில், நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து 4 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததால் வறட்சி நிலவியது. இதனால், தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போனது. தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் ஏற்பட்டது. இதன்காரணமாக தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. இடை, இடையே நல்ல வெயிலும் காணப்பட்டது. தேயிலை விவசாயத்திற்கேற்ற சீதோஷ்னநிலை காரணமாக கடந்த சில வாரங்களாக தேயிலை மகசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தற்போது, பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கும் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோவிற்கும் மேல் பசுந்தேயிலை வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. பசுந்தேயிலை வரத்து காரணமாக கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைதுாள் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், மழை காரணமாக தேயிலை தோட்டங்கள் அனைத்தும் பசுமையாக காட்சியளிப்பதுடன் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் குறைந்து வருகிறது.
