×

கோத்தகிரி மக்களின் குடிநீர் ஆதரமான ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியது

கோத்தகிரி : கோத்தகிரி கொடநாடு அருகே ஈளாடா கிராமப் பகுதியில் 90 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், 9 அடி முதல் 12 அடி வரை ஆழம் கொண்ட தடுப்பணை உள்ளது.

இதன்மூலம், கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.தற்போது தென்மேற்கு பருவ மலையின் தாக்கம் குறைந்து இருந்தாலும் கூட அவ்வப்போது பெய்து வரும் மிதமான மழை மற்றும் சாரல் மழையின் காரணமாக தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேலும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள நிலையில் மலைப்பகுதிகளில் உள்ள ஊற்றுகளால் அணையில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.

அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் கோத்தகிரி நேரு பூங்கா அருகில் உள்ள நீர் உந்து நிலைய தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி தடுப்பணை நீரை நம்பி தடுப்பணை அருகே உள்ள விவசாயிகள் மலைக்காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர்.

கோத்தகிரி நகரில் உள்ள 9 வார்டு மக்களின் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மத்திய அரசின் அம்ரூத் குடிநீர் விநியோகம் திட்டத்தின் கீழ் 41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நிறைவுற்ற நிலையில் அதன் மூலம் கோத்தகிரி நகரில் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தங்கு தடையின்றி செய்யப்பட்டு வருகிறது.

வரும் காலங்களில் தங்கு தடையின்றி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அளவிற்கு பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் கடந்த மே மாதங்களில் கொடநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சியான சீதோஷ்ண நிலை இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக இயற்கை நீர் ஊற்றுகள் இருந்து தொடர்ந்து தடுப்பணைக்கு தண்ணீர் தங்கு தடையின்றி வருவதால் ஈளாடா தடுப்பணை தற்போது அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

அதோடு தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. தடுப்பணையில் தண்ணீர் இருப்பு உள்ளதால் எதிர் வரும் காலத்தில் கோத்தகிரி நகரின்‌ குடிநீர் தேவையை பூர்த்தி செய்தும்,குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Elada Dam ,Kotagiri ,Elada ,Kodanad ,
× RELATED தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய...