×

6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுவதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய 700 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் ஓரளவு சமாளிக்கக் கூடிய கட்டணத்தில் மருத்துவப் படிப்பை படிக்கும் நல்வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்கள், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,900 இடங்கள், 5 தனியார் பல்கலைக் கழகங்களில் 850 இடங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 3,050 இடங்கள், ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் 150 இடங்கள் என மொத்தம் 13,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

இவற்றில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் போக 4,247 இடங்களும், மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 97 இடங்களும் என 4,344 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்படும். இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் உள்ள 4,750 எம்.பி.பி.எஸ் இடங்களில் 50 % முதல் 65 % இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்னை புனித பீட்டர் மருத்துவக் கல்லூரி, தன லட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவை இப்போது நிகர்நிலை பல்கலைக் கழகங்களாக மாறி விட்டதால், அவற்றில் உள்ள 650 இடங்களில் இருந்து மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு வந்த 350 இடங்கள் இப்போது பறிபோகின்றன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டிருப்பதே சட்ட விரோதம் ஆகும். தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட வேண்டும் என்றால், அதற்கு அந்தக் கல்லூரி இணைவு பெற்றிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் தடையின்மை சான்று கட்டாயம் ஆகும். ஆனால், தடையின்மை சான்று இல்லாமலேயே தனியார் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அந்த நிலைப்பாட்டை வென்றெடுக்கும் நோக்குடன் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும்.

இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், 100 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டுமே கொண்டுள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை கூடுதலாக உருவாக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையின் மூலம் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 

Tags : ANBUMANI ,Chennai ,Tamil Nadu ,President ,Tamil Nadu government ,
× RELATED விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள்...