×

நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில்

ராஜகோபுர தரிசனம்!

பத்தாம் நூற்றாண்டு கோயில் வரிசையில், காங்கேயம், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், காங்கேயம்பாளையம் கிராமத்தில், காவிரி ஆற்றின் மையப் பகுதியில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயம் காவிரியின் குறுக்கே மட்டுமல்லாமல் காவிரி உற்பத்தியாகும் குடகு முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை நடு மையமாக உள்ளது. ஸ்கந்த புராணத்தில் ஸ்வேதமலை என்று இடம்பெற்று இருப்பதாகவும், ஓம்கார வடிவில் அமைந்துள்ளதாக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவ்வாலயத்தை தரிசிக்க வந்த பொழுது கூறியுள்ளார்.

இவ்வாலயத்தில் உள்ள சுவாமிக்கு நட்டாற்றீஸ்வரர் மற்றும் அகஸ்தீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு நல்ல நாயகி மற்றும் அன்னபூரணி என இரு பெயர்கள் உள்ளன. அம்பாள் சன்னதி சிவனின் வலப்புறத்தில் அமைந்துள்ளதால் அம்பாள் இங்கு சுதந்திர சக்தியாக விளங்குகிறார். இந்தக் கோயிலின் தற்போதைய கட்டிட அமைப்பு மற்றும் வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில், இது கொங்கு சோழர் காலத்தைச் சேர்ந்ததாகவும், சுமார் கி.பி. 1012ம் நூற்றாண்டில் உருவானதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பின்னர் பாண்டியர், விஜயநகர மற்றும் நாயக்கர் காலங்களில் திருப்பணிகள் நடைபெற்றிருக்கலாம்.

கல்வெட்டுகள் மற்றும் கட்டடக்கலை அம்சங்கள் இதன் நடுநிலைக் காலப் பழமையை உணர்த்துகின்றன. ேமலும், கி.பி. 10ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அகஸ்தீஸ்வரர் ஆலயமாக நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் எந்த சோழ மன்னரால் கட்டப்பட்டது என்று தெளிவாக கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. இத்தலத்தில் மூலவர் அகஸ்தீஸ்வரர் சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதி தனியாக அமைந்துள்ளது. சோழர் காலக் கோயில்களில் வழக்கமாகக் காணப்படும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் போன்ற கோஷ்ட மற்றும் பரிவாரச் சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. பழமையான சிவாலயங்களில் காணப்படும் நந்தி, பலிபீடம் மற்றும் துவாரபாலகர் சிற்பங்கள் முக்கிய அம்சங்களாக காணப்படுகிறது.

இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலக் கோயிலாகக் கருதப்படுவதால், ஆரம்ப கால சோழர் கோயில்களை போல பெரிய ராஜகோபுரத்தை விட கருவறை மற்றும் விமானத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் நாயக்கர் அல்லது விஜயநகரர் காலத்தில் கோபுரம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கும் என்று கூறப்படுகிறது.

தென்னிந்திய திராவிடக் கட்டடக்கலையின் வழக்கப்படி, கோபுரத்தில் சிவபுராணக் காட்சிகள், தேவதைகள், கணங்கள், துவாரபாலகர்கள் மற்றும் யாழி வடிவ அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. காவிரியின் நடு ஆற்றில் இருக்கும் ஈஸ்வரர் என்பதால், நட்டாற்றீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோயிலின் மிகப்பெரிய அழகு அதன் இருப்பிடம். காவிரி ஆற்றின் நடுவே சிறிய மேட்டுத் தீவு போன்ற உயர்ந்த பகுதியில் அமைந்துள்ளது. வெள்ளக் காலங்களில் கோயில் நீரால் சூழப்பட்டு ஒரு இயற்கை தீவாகக் காட்சியளிக்கிறது.

திலகவதி

Tags : Nattari Eeswarar Temple ,Rajagopuram Darshan ,Nattari ,Eeswarar Temple ,Kangeyam, Erode district ,Sri Nattari Eeswarar Temple ,Kangeyampalayam village ,Modakkurichi taluk, Erode district ,Cauvery river ,Cauvery ,
× RELATED பாற்கடல் கடைந்த பரந்தாமனே!