பகவான் எத்தனையோ அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். அதிலே குறிப்பிடத்தக்க அவதாரங்கள் பத்து. இதனை தசாவதாரம் என்கிறோம். அதில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் முதல் உயிர் நீரில் மட்டும் வாழ்வது. அது மச்சாவதாரம். அடுத்து நீரிலும் நிலத்திலும் வாழ்வது கூர்ம அவதாரம். ஆமையினத்தைக் குறித்து விலங்கியலாளர் கூறுகையில், ஊர்வன உயிரினத்தில், மேலோடு உள்ள ஒரே உயிரினம் ஆமைகள்தான். இவற்றில் கடலில் வாழ்பவை. நன்னீர் நிலைகளில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை எனப் பல வகைகள் உள்ளன. உடல் முழுவதும் கடினமான ஓட்டினால் மூடியிருக்கும். தலை, கால், வால் மட்டுமே வெளியே தெரியும். ஆபத்தென்றால் இந்த உறுப்புகளை உடலினுள் இழுத்துக் கொள்ளும். இவற்றிற்கு பற்கள் கிடையாது என்று விலங்கியலார் மொழிவர். கடலாமை, நன்னீர் ஆமை, சருகாமை அல்லது வயலாமை போன்ற ஆமைகள் பற்றிய செய்திகள் அகநானூறு நூலில் இடம் பெற்றுள்ளன.
ஆமைகளுக்கு நீண்டு வளர்ந்த கூரிய நகங்கள் இருப்பதாக அகநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன. பின்னி தூறுகளையுடைய வள்ளைக்கொடியின் நீண்ட இலைச்செறிவில், மடிந்து கிடக்கும் துயிலை வெறத்த வலிய நகத்தினையுடைய ஆமையை,
“பிணங்கரில் வள்ளை நீடிலைப் பொதும்பின்
மடிதுயின் முனைஇய வள்ளுகிர் யாமை’
(அகம்.256:1-2)
– என்று மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் வருணிக்கின்றார்.
ஆமை வளைந்த காலிளையுடையது என்பதை, ‘கொடுந்தாள் யாமை பார்ப் பொடு கவரும்’ (அகம்.117:16) எனும் தொடரிலும் அறியலாம். திருக்குறளில் ஆமை பற்றிய குறள் உண்டு.
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து’’
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும், அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் (ஏழு பிறப்பிலும்) – அரணாக இருந்து உதவும்.
தன்னை வெளிப்படுத்தாமல் தன் பெருமையை வெளிப்படுத்திய அவதாரம் கூர்ம அவதாரம். இந்த அவதாரத்தை ஏன் எடுத்தார்? அதற்கு ஒரு பின்னணி உண்டு.ஒரு முறை துர்வாச மகரிஷி இந்திரலோகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சில வித்யாதர பெண்கள், தாங்கள் மகாலட்சுமியை தரிசித்துவிட்டு வருவதாகச் சொல்லி, மகாலட்சுமியின் மாலை பிரசாதத்தை, துர்வாச முனிவருக்கு அன்புடன் அளித்தனர். துர்வாச முனிவர் அதை இந்திரனுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு சென்றார். தேவலோகத்தில் அப்போது இந்திரனாக இருந்தவன் மந்தரத் துருமன் என்பவன். அப்போது இந்திரன் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்தான். தேவலோகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஐராவதம் என்ற யானை மீது ஆரோகணித்து தேவர்கள் புடைசூழ ஊர்வலம் சென்று கொண்டிருந்தான். மகாலட்சுமியின் மாலையை இந்திரன் அணிவது சிறப்பாக இருக்கும் என்று மகிழ்ச்சியோடு இந்திரனுக்குத் தந்தார்.
ஆனால் இந்திரன் அதை அலட்சியமாக, கையிலே வாங்காமல், யானையின் அங்குசத்தை நீட்டி வாங்கினான். அதை தன்னுடைய கழுத்திலும் மரியாதையோடு போட்டுக் கொள்ளாமல், யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். ஏதோ ஒரு பொருள் தன்னுடைய தலையில் உறுத்துகிறது என்று நினைத்த யானை, தன்னுடைய துதிக்கையால் அந்த மாலையை இழுத்துப் போட்டு காலால் மிதித்தது. தன்னுடைய கண் முன்னே மகாலட்சுமியின் பிரசாதம் இப்படி அவமதிக்கப்படுவதை எண்ணி துர்வாசரின் கோபம் அதிகமாகியது.
“எந்தச் செல்வம், பதவி, ஆணவத்தால், நீ மகாலட்சுமியின் அருள் பிரசாதமாகிய மாலையை அலட்சியப்படுத்தினாயோ, இந்தக் கணமே உன்னுடைய பதவியும் செல்வம் போகட்டும்’’ என்று சபிக்க, அடுத்த நிமிடம் இந்திரலோகம் இருண்டது. தேவர்கள் வலிமை இழந்தனர். அசுரர்கள் படையெடுத்தனர். இந்திரன் தோற்றுப் போனான்.
அப்பொழுதுதான் அவன், தான் செய்த தவறை உணர்ந்தான். இழந்த செல்வத்தைப் பெற வேண்டும் என்று ஸ்ரீ மன் நாராயணனை வேண்டிக் கொண்டான். அவர் பாற்கடலைக் கடைந்தால், உன்னுடைய செல்வத்தை அடையலாம் எனச் சொன்னார். மந்திர மலையை நட்டு, வாசுகி என்ற பாம்பை அதிலே பொருத்தி, மத்துக் கடைவதற்காக அசுரர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, கடைய ஆரம்பித்தனர்.
மலை, பாரம் தாங்காமல் சாய்ந்தது. அவர்களால் கடைய முடியவில்லை. எம்பெருமானை வேண்டிக்கொள்ள அவர் கூர்ம அவதாரம் எடுத்து மந்திரமலையின் முழு எடையையும் தாங்கிக்கொண்டு, பாற் கடலைக் கடைவதற்கு உதவி செய்தார். இதை இளங்கோவடிகள் பாடுகிறார்.
“வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’’
அப்பொழுது பாற்கடலில் பல்வேறு பொருள்கள் வந்தன. காமதேனு, கற்பக விருட்சம், வெள்ளை குதிரை, அப்சரஸ் பெண்கள், ஐராவதம் என்ற வெள்ளை யானை, சந்திரன், திருமகள் ஆகியோர் வந்தனர். தொடர்ந்து மருத்துவர்களின் தேவதையான தன்வந்திரி பகவான், கையில் சீந்தில் கொடி, அட்டை பூச்சி, அமிர்தகலசம், கதாயுதம் கொண்டு தோன்றினார். இவர் கையிலிருந்த அமிர்த கலசத்திலிருந்து துளசி தோன்றியது என்றும் சொல்வார்கள். பாற்கடலில் தோன்றிய பற்பல பொருள்களையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். திருமகளை ஸ்ரீ மன் நாராயணன் ஏற்றுக்கொண்டார்.
இப்படி, தேவர்களுக்கு அமுதம் தருவதற்காகவும் வெற்றி பெறுவதற்காகவும் எம்பெருமான் கூர்ம அவதாரம் எடுத்தார். ஆபத்து வரும்போது ஆமை தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு தற்காத்துக்கொள்ளும். மனிதனும் ஐம்புலன்கள் கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும். இந்தத் தத்துவம்தான்
கூர்மாவதாரம்.
“ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம் பகவான் அஜ:
மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ’’
என்ற ஸ்லோகத்தின் படி, கூர்ம அவதாரம் ஆனி மாதம் தேய்பிறை துவாதசி அன்று எடுக்கப்பட்டது. அந்த நாள் கூர்ம ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அவ தாரத்தில் எம்பெருமான் எந்த ஆயுதமும் எடுக்கவில்லை. யாரையும் வதம் செய்யவுமில்லை. தேவர்களுக்கு அமுதம் தந்து காப்பாற்றினார்.
“மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த
வித்தகனை,கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்தடியேன் கண்டு கொண்டேனே”
– என்பது திருமங்கை ஆழ்வார், கூர்ம அவதாரப் பெருமை குறித்துப் பாடிய பாசுரம்.
சனிகிரக பீடைகள் உள்ளவர்கள், கூர்ம அவதாரத்தை நினைத்து வணங்கினால் சனி தோஷங்கள் நீங்கும். கூர்மம் என்பது பணிவு. பணிவோடு இருந்தால் எத்தகைய பெரும் செயலையும் எளிதில் முடித்து விடலாம். ஸ்ரீ கூர்மப் பெருமாளுக்கு, ஆந்திராவில் ஸ்ரீ காகுளம் அருகே கூர்மம் என்கிற இடத்தில் ஆலயம் உள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ காகுளம் உள்ளது. ஸ்வேதபுரத்து அரசன் மனைவி பெயர் விஷ்ணு பிரியா. அவள் திருமாலின் பக்தை. ஏகாதசியில் அவள் விரதம் இருந்தாள் பெருமாளுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது மனைவியை சுவேதன் காதலோடு பார்த்தான். மன்னன் இப்படி நடந்து கொள்கிறானே, விரதம் பங்கப்படுமே என்று நினைத்த அரசி, திருமாலை மனதார நினைத்துக் கொண்டாள். அப்பொழுது இருவருக்கும் நடுவில் ஒரு ஆறு பிரவாகமாக ஓடியது. ஆயினும் மன்னனின் காதல் வேகம் குறையவில்லை. அவனும் இப்போது திருமாலைப் பிரார்த்தித்தான்.
“நான் இந்த நதியைக் கடந்து என்னுடைய மனைவியை அடைய உதவ வேண்டும்” இப்பொழுது யார் கோரிக்கையை ஏற்றுக் கொள்வது? உடனே திருமால், பக்தனின் பிரார்த்தனைக்கு இணங்கி ஒரு ஆமையாக உருவெடுத்தார்.
“என் மீது ஏறிக்கொள். அந்தப் பக்கம் விடுகிறேன்’’ என்றார். ஆமையின் மீது உட்கார்ந்தவுடன் அவனுக்கு ஞானம் பிறந்தது. “மற்றை நம் காமங்கள் மாற்று’’ என்பதுபோல அவனுடைய உடல் ஆசை இப்பொழுது பகவானிடத்தில் மாறியது. கூர்ம அவதாரத் திருவுருவை வணங்க ஆரம்பித்தான். தனக்கு ஞானம் தந்த திருமாலுக்கு ஒரு ஆலயம் அமைத்தான். இங்கே கூர்ம நாயகித் தாயாருடன் ஸ்ரீ கூர்மவதாரப் பெருமாள் அருள்புரிகிறார். பெருமாள் மிதந்து வந்த நதியானது சுருங்கி ஸ்வேத புஷ்கரணியாக மாறியது.
இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டில் இருக்கிறது. விழிகள் தங்கத்தில் மின்னும். வால் பகுதி சாளக்கிராமத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஆலயம். இங்கே ஆமைகளும் வளர்க்கப்படுகின்றன. ஸ்ரீ ராமானுஜர் தனது விஜயத்தின் போது இங்கே வந்தார். இத்தலத்தின் பெருமையை இங்குள்ள மக்களுக்கு
உணர்த்தினார்.
ஸ்ரீ ரங்கம் தசாவதாரம் சந்நதியில் மற்றும் மதுரை அழகர்கோயிலில் கூர்ம அவதார திருவுருவம் உள்ளது. கூர்ம அவதார நிகழ்வு, கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கில் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதை சிற்பமாகவும் காட்சி படுத்தப் பட்டுள்ளது. கூர்ம அவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.
கூர்ம காயத்ரி மந்திரம்:
“ஓம் தராதராய வித்மஹ
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்’’
– என்னும் மந்திரத்தைக் கூறி, திருமாலின் அருள் பெற்று வளமுடன் வாழ்வோம்!
