×

சாதனைச் செல்வி சாமுண்டீஸ்வரி

புராண கால உதாரணங்களின்படி, பொதுவாக தவம் புரிவது என்பதே, தெய்வங்களிடமிருந்து அரிய வரங்களைப் பெறுவதற்காகத்தான். முனிவர்கள் தவிர, அரக்கர்களும் இவ்வாறு தவம் இயற்றித் தம் வல்லமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்ன, முதலாமவர்கள் உலக நன்மைக்காக அவ்வாறு தாம் பெறும் வரத்தை பயன்படுத்தினார்கள்; அரக்கர்களோ, தம் அதிகார எல்லையை விரிவுபடுத்தவும், சர்வாதிகாரத்தை நிலைநாட்டவும், தாங்கள் கடவுளுக்குச் சமமானவர்கள், ஏன், அவர்களைவிட உயர்ந்தவர்கள் என்பதாக உருவகித்துக் கொண்டு, தம்மைப் பிற அனைவரும் வணங்கி, தமக்கு அடிமைகளாக விளங்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள்.

இறை அம்சங்கள், அந்த அரக்கர்களுக்கு வரம் வழங்கினாலும், அதிலும் ஏதேனும் சூட்சுமக் குறையுடன்தான் அருளினார்கள். அவர்களுடைய ஆணாதிக்கம் மற்றும் யதேச்சாதிகார ‘பலவீன’த்தைப் புரிந்து கொண்டு அவர்கள் பெண்களைத் தவிர வேறு யாராலும் மாய்க்கப்படக் கூடாது என்பது போன்ற வரம் ஈந்தார்கள். ஏனென்றால் அசுரர்களுக்குப் பெண்கள் என்றாலே கிள்ளுக்கீரைதானே!

இதனால்தானே, அவர்களுடைய கொட்டம் சகித்துக் கொள்ள முடியாத எல்லைக்குப் போகும்போது, பராசக்தியின் ரூபமாக ஒரு பெண் தெய்வம் அவர்களை வதம் செய்யும் சூழ்நிலையை கடவுளர் உருவாக்கினார்கள்! அல்லது ‘வீட்டிலும் இல்லாமல், வெளியிலும் இல்லாமல், பகலில் இல்லாமல், இரவில் இல்லாமல், எந்த ஆயுதத்தினாலும் அல்லாமல், மானுடர் யாராலும் அல்லாமல், விலங்காலும் அல்லாமல்தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றிருந்த ஹிரண்யகசிபுவை, அவன் கோரிய நிபந்தனைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, மஹாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து மாய்த்தார் அல்லவா? அதேபோல பல ரூபங்களில் சக்தியை அவதரிக்கச் செய்து அந்தக் கொடியவர்களின் பிடியிலிருந்து அப்பாவி மக்களையும், அறவழியில் செல்வோரையும் காப்பாற்றும் சூழ்நிலைகளையும் கடவுளர் உருவாக்கினர்.

அவ்வாறு தோன்றிய ஓர் அம்சம்தான், சாமுண்டீஸ்வரி. தமிழக மன்னர்கள் தாம் பெற்ற போர் வெற்றிகளை நிரந்தரப் புகழாக நிலை நிறுத்திக் கொள்ள ‘கங்கை கொண்டான்,’ ‘கடாரம் கொண்டான்’ என்றெல்லாம் பட்டம் சூட்டிக் கொண்டார்களே, அதேபோல சண்டன், முண்டன் என்ற இரு அரக்கர்களை வதம் செய்ததால் அம்பிகையும் சாமுண்டீஸ்வரி என்று போற்றப்படலானாள். இது அன்னையின் வெற்றி அடையாளம் மட்டுமல்ல; அரக்கர் எங்கு தோன்றினாலும் சக்தி வாய்ந்த பெண் தெய்வம் அவர்களை நிர்மூலமாக்கும் என்பதை உலகோருக்கு அறிவுறுத்தும் உத்தியும்தான்.

ஹிரண்யாட்சகன் என்ற அசுரன், உலகமனைத்துக்கும் தானே சொந்தக்காரன் என்பதைப் பறைசாற்றும் வகையில் பூமியை அப்படியே ஒரு பாய் போலச் சுருட்டி எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். அபோது மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார். கடல் ஆழத்துக்குச் சென்று ஹிரண்யாட்சகனை அழித்து அவனிடமிருந்து பூமித்தாயை மீட்டார். உலகம் மீண்டும் புதுக் காற்றை சுவாசித்து, புத்துயிர் பெற்றது. இந்த தீரச் செயல் புரிந்த வராகர் மீது பூமிதேவி காதல் கொண்டாள்.

வராகரின் அப்போதைய கோப மனநிலையில் கூடியதாலோ என்னவோ அவர்களுக்கு நரகாசுரன் என்ற அரக்கன் பிறந்தான். ஆனால், இவனும் தன் இருப்பை நிரந்தரமாக்கிக் கொள்ள, மஹாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டான். அவனுக்காக இரங்கி வந்த திருமால், அவனுடைய விருப்பப்படியே, அவனுடைய தாயார் அல்லாது வேறு யாராலும் அவனுக்கு மரணம் நிகழாது என்ற வரத்தை அளித்தார்.

பிறகு அவர் கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, பூமிதேவி, சத்யபாமாவாக உருக்கொண்டு அவரை மணந்தாள். இந்த காலகட்டத்தில் நரகாசுரனின் கொட்டம் எல்லை கடந்து போக, அவனை அழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிருஷ்ணனுக்கு ஏற்பட்டது. ஆனால், அவன் பெற்றிருந்த வரம் அவருக்குத் தெரியுமாகையால், சத்யபாமாவாக அவதரித்திருக்கும் பூமிதேவியைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவனுடன் போரில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தன்னை சோர்வுற்றவர் போலக் காட்டிக் கொண்டு சத்யபாமாவை போரைத் தொடரச் செய்தார். அவருடைய ஆணைப்படி, அரக்கனை அன்னையின் அம்பு வீழ்த்திச் சாய்த்தது. அரக்கத்தனமாக செயல்படுபவன் சொந்த மகனே ஆனாலும், அவனை அவனுடைய தாயே வீழ்த்தத் தயங்க மாட்டாள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார் கிருஷ்ணன்.

ஆண்களால், விலங்குகளால் மற்றும் தண்ணீரில் மரணம் இல்லை என்ற வரத்தைப் பெற்றிருந்தான் மகிஷாசுரன். இவனை வதைக்க வேண்டிய காலம் நெருங்கிய போது, சிவபெருமான் சக்தியின் ஆற்றலை புவியோருக்கு அறிவிக்க விரும்பினார். ஆகவே அவனை வதம் புரிய அம்பிகையை அனுப்பி வைத்தார். அந்த வெற்றியின் காரணமாகவே, அம்பிகை, மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்பட்டாள்; போற்றப்பட்டாள்.

இப்படி சக்திக்கும் பரிபூரண வல்லமை உண்டு என்பதை உணர்த்தும் வகையில் பல புராண சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் சண்ட – முண்டன் வதம். அரக்க சகோதரர்களான சண்டனும், முண்டனும் பெண்ணின் வலிமையையும், ஆற்றலையும் மிகச் சாதாரணமாக மதித்து, பெண்களைத் தவிர வேறு யாராலும் தங்களுக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார்கள். இவ்வாறு கிடைத்த சலுகையில் அவர்கள் மானிடர், தேவர்கள் என்று தராதரம் பார்க்காமல் அனைவர் மீதும் தம் அக்கிரம அதிகாரத்தைச் செலுத்தினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கயிலைநாதனை தஞ்சம் அடைய, அவர், அந்தப் பொறுப்பை பார்வதி தேவியிடம் ஒப்படைத்தார்.

(இக்காலத்திய கணவர், திறமைமிக்க தம் மனைவியை பணிபுரிய அனுப்பி வைப்பதுபோல என்று வைத்துக் கொள்ளுங்களேன்!)கணவர் அளித்த பொறுப்பால் பார்வதி தேவி மிகுந்த உற்சாகமும் நல்லோரைத் துன்புறுத்தும் அரக்கரை அழிக்கும் ஆவேசமும் பெற்று வீறுகொண்டு எழுந்தாள். அம்பிகைக்கும் அசுரர்களுக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் பார்வதியின் உக்கிரம், அவளுடைய புருவ மத்தியிலிருந்து கரிய உருவம் ஒன்றைத் தோற்றுவித்தது. இந்த சக்தியின் அம்சம் அரக்க சகோதரர்களை மாய்த்தது. அவர்கள் இருவரின் தலைகளையும் துண்டித்து பார்வதி தேவியின் காலடியில் சமர்ப்பித்தாள் கரிய சக்தி. இதனால் மகிழ்ந்த அம்பிகை, அவளுக்கு சாமுண்டி என்று பெயரிட்டு சிறப்பு செய்தாள். இந்த சாமுண்டி, பார்வதியின் அம்சம் என்பதால், சாமுண்டீஸ்வரி என்றானாள்.

இந்த சாமுண்டீஸ்வரிக்கு கர்நாடக மாநிலத்தில் மைசூரு பகுதியில் ஒரு மலையின் மீது எழிலான கோயில் உருவாகியிருக்கிறது. இதனாலேயே இந்த மலை, ‘சாமுண்டீஸ்வரி ஹில்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொய்சாள மன்னரான விஷ்ணுவர்த்தன் இந்தக் கோயிலில் உறையும் அம்பிகை மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எதிரிகளை எளிதாக வெல்ல, அன்னையின் அருள் தனக்குப் பெரிதும் உதவி செய்ததாக அவர் நம்பினார்.

தன்னையும், தன் குடும்பத்தையும் மட்டுமல்லாது தன் குடிமக்கள் அனைவருக்கும் சாமுண்டீஸ்வரி பாதுகாவலாக விளங்கி காத்தருள வேண்டும் என்பதற்காகவே அந்தக் கோயிலை அவர் புதுப்பித்தார்; அம்பிகைக்கு நாள் தவறாமல் ஆராதனை செய்தார். அவருக்குப் பிறகு 1573ம் ஆண்டுவாக்கில், மைசூருவை ஆட்சி புரிந்த நான்காம் சாம்ராஜ உடையார் அந்தக் கோயிலை விரிவுபடுத்தினார். இவரும் அன்னையின் கருணையால் கவரப்பட்டவர்தான்.

ஒருமுறை தன் பரிவாரங்களுடன், மைசூரு காட்டுப் பகுதிக்கு அவர் சென்றபோது எதிர்பாராத வகையில் கடும் புயலும், இடைவிடாத மழையும் அவர்கள் அனைவரையும் ஒரு அடி கூட முன்னேற விடாமல் தடுத்தன. உடையார் ஏற்கெனவே சாமுண்டீஸ்வரியின் அருளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால், உடனே அன்னையை எண்ணி உள்ளம் உருக பிரார்த்தனை செய்தார். புயலும், மழையும் தமக்கான செயல் நேரம் முடிந்து விட்டதால் மெல்ல அடங்கித் தணிந்தன. தம் பரிவாரங்களில் யாருமே, ஏன், ஒரு குதிரை கூட எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்த அதிசயத்தை எண்ணி மகிழ்ந்த சாம்ராஜ உடையார், சாமுண்டீஸ்வரிக்கு உளமுருக நன்றி தெரிவித்தார். உள்ளத்தால் மட்டுமன்றி, சாமுண்டீஸ்வரி கோயிலை மேலும் விரிவுபடுத்தினார்.

மலையேறிச் சென்றால், அவ்வாறு கடந்து வந்த களைப்பு நீங்கும் வகையில், சாமுண்டீஸ்வரி கருணை அருள் பொழிகிறாள். கருவறையில் எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி நல்குகிறாள். அம்பிகையின் பார்வையில் ‘இவளா சண்ட, முண்டர்களை வதைத்தாள்!’ என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அத்தனை சாந்தம், கருணை, தாய்மை! சாமுண்டீஸ்வரியை வணங்குவோர் அநாவசிய பயம், பிரச்னைகளால் வீண் கலக்கம், வீழ்ந்தாலும் உடனே மீண்டுவரும் மனோதைரியம், பலம் எல்லாம் பெறுவர் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. ‘‘ஓம் பிசாசத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னோ சாமுண்டி ப்ரசோதயாத்’’ – என்ற சாமுண்டீஸ்வரி அம்மன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து எல்லா நலன்களும் பெறலாம்.

நவரங்க மண்டபம், அந்தராளம், பிராகாரம், கருவறை என நாற்கர வடிவில் கோயில் வெகு சிறப்பாக உருவாகியிருக்கிறது. ஏழு தங்கக் கலசங்கள் கொண்ட ஏழுநிலை ராஜகோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது – அந்த மலைக்கே மகுடம் வைத்தற்போல! கருவறையிலுள்ள சாமுண்டீஸ்வரி சிலை, மார்க்கண்டேய மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நந்தினி, கமலினி என்ற அம்மனின் தோழியர் இருவர், துவாரபாலகியராக கருவறையைக் காவல் புரிகிறார்கள். வலப்புரத்தில் பைரவருக்கு என்று தனியே சந்நதி உள்ளது.

அடுத்து, 1827ம் ஆண்டு வாக்கில் அப்போதைய மன்னர் கிருஷ்ணராஜ உடையார், கோயிலுக்கு ஏராளமாகத் திருப்பணிகள் செய்திருக்கிறார். அம்மனுக்குரிய ஆபரணம் மற்றும் ஊர்வல வாகனங்களை தானமாக அளித்திருக்கிறார். இந்த சேவையைச் சிறப்பிக்கும் வகையில் உள்பிராகாரத்தில் அவருடைய ஆறடி சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அவருடைய பட்டத்தரசிகளான ராம விலாசம், லட்சுமி விலாசம் மற்றும் கிருஷ்ண விலாசம் ஆகிய மூவரும் உடன் இருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் நடைபெறும் தசரா (நவராத்திரி) விழா இந்தக் கோயிலிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது என்கிறார்கள். 1610ம் ஆண்டு அவ்வாறு தொடங்கிய இவ்விழா இன்றளவும் தொய்வின்றி நடந்தேறுவது குறிப்பிடத்தக்கது. தற்போது அது கர்நாடக அரசு விழாவாக தனிச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இன்றும் விழா சமயத்தில், மைசூரு மகாராஜாவின் அரண்மனை முழுவதும் மின்னொளியால் மிகப் பிரமாண்டமாக ஒளிர்வதைக் காணலாம். நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி அன்று இரவில் மேற்கொள்ளப்படும் யானை ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அருள்கிறாள்.

இந்த சாமுண்டீஸ்வரி கோயில், 18 சக்தி பீடங்களில் ஒன்று. இன்னொரு இணை கதையும் உள்ளது. சண்ட – முண்டன் வதத்தை அடுத்து மஹிஷாசுரனை அம்பிகை வதம் செய்ய முற்பட்டபோது அவனிடமிருந்து தரையில் சிந்திய ஒவ்வொரு ரத்தத் துளியிலிருந்தும் ஓர் அசுரன் உருவானான். (அவன் பெற்றிருந்த வரம் அப்படி!) அப்போது, கோபம் மிகுந்த சாமுண்டீஸ்வரியின் வியர்வையிலிருந்து உருவானாள் மாரம்மா என்ற உப அம்பிகை.

இவள் தன் நாக்கை நீட்டி, அரக்கனின் ரத்தத் துளிகள் கீழே விழுமுன் அருந்திவிட்டாள். அதனால் அரக்கர் வதம் கொஞ்சம் எளிதாயிற்று. மாரம்மாவைத் தன் தங்கையாக பாவித்த சாமுண்டீஸ்வரி, அவளைத் தன்னுடனேயே இருத்திக் கொள்ளும் பொருட்டு சாமுண்டீஸ்வரி மலைக்குப் பக்கத்திலேயே கோயில் கொள்ளச் செய்தாள். தங்கைக்கும் தனி மலைக் கோயில்! சாமுண்டீஸ்வரியை தரிசிக்கும் பக்தர்கள் மாரம்மாவையும் தரிசித்து விட்டுத்தான் செல்கிறார்கள். மாரம்மாவின் அருளால் மன நிம்மதியும், ரத்த சோகை, ரத்தப் புற்றுநோய் போன்ற கொடிய உபாதைகளிலிருந்து நிவாரணமும் பெறுகிறார்கள், பக்தர்கள்.

ப்ரபுசங்கர்

Tags : Sadat Selvi Chamundeeswari ,
× RELATED பாற்கடல் கடைந்த பரந்தாமனே!