தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: முதலமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ்

சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் விஜய் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தேர்தல் வெற்றி தொடர்பான வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றார். இரண்டிலுமே வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய்யின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விஜய்யின் வேட்புமனுவில் தவறான மற்றும் முரணான தகவல்கள் இருந்ததாக அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

அதேநேரம் பெரம்பூர் தொகுதியில் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் வழக்கு தொடர்ந்தனர். முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான வரி தொடர்பான சில விபரங்களை முறையாகக் குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கில் முதல்வர் விஜய் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மனுக்களில் உள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.இந்தக் குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின், முதல்வர் விஜய் இந்தத் தேர்தல் வழக்குகளுக்கு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா வெற்றிக்கு எதிராகவும், திருவண்ணாமலையில் திமுகவின் எ.வ. வேலு வெற்றிக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கிலும் அவர்களிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சுமார் 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: