தஞ்சாவூர், ஜூலை 6: தஞ்சையில் சாலையோர உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி, பதிவு சான்றிதழ் முகாமில் உணவுப் பொருட்களுக்கு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தக்கூடாது என உணவு பாதுகாப்புத்துறை தஞ்சை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தஞ்சை மாவட்டம் சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் பதிவு சான்றிதழ் முகாம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சசிகுமார், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கும் முகாமை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: சாலையோர உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும். உணவு அல்லது உணவு சேமிப்பு இடங்களில் வேலை செய்யும் போது சுத்தமாக வைத்திருக்க இருக்க வேண்டும். போதுமான வெளிச்சம் , காற்றோட்டம் மற்றும் தீ பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும். தேவையான இடங்களில் குடிநீர் வசதி உடன் கூடிய உள்ளமைக்கப்பட்ட கழுவும் தொட்டி இருக்க வேண்டும் . மூலப் பொருட்கள், சமைத்த, தயார் உணவுகள் , குடிநீர், உணவு பாத்திரங்கள் , பாதுகாப்பு உபகரணங்கள் ( ஏப்ரன், முக கவசம், தொப்பி, கையுறை போன்றவை) , சுத்தம் செய்யும் துணிகள் மற்றும் சுத்திகரிப்பு பொருட்களை தனித்தனியாக சேமிக்க இடங்கள் ஒதுக்க வேண்டும். உணவுகளை சுத்தமாகவும் ,தரமாகவும் கொடுக்க வேண்டும் . ஒரு மறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
உணவுப் பொருட்களுக்கு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தக்கூடாது. உணவு தயார் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும். காலாவதியான பொருட்களை பயன்படுத்தக்கூடாது . உணவு பொருள்களை பார்சல் செய்ய செய்தித்தாள்களை பயன்படுத்தக் கூடாது. வாழை இலை உள்ளிட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் உணவு சம்பந்தமான புகார்களை தெரிவிக்க இலவச எண் மற்றும் செயலி உள்ளது. இதில் புகார் தெரிவித்தால் 72 மணி நேரத்திற்குள் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பேசினார். இந்த முகாமில் சாலையோர உணவு வணிகர்களுக்கு இலவசமாக பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் இளைஞர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
