×

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா-ஏ அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

காலே: இலங்கை-ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (4 நாள் போட்டி), இந்தியா-ஏ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா ஏ இலங்கை ஏ அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் அதே மைதானத்தில் ஜூலை 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இலங்கை-ஏ அணி முதல் இன்னிங்சில் 366 ரன் குவித்து ஆல் அவுட்டான நிலையில், இந்தியா-ஏ 543 ரன் குவித்து ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 168 ரன், படிக்கல் 94, கேப்டன் ஜுரெல் 53, ரஷீத் 45, சரன்ஷ் ஜெயின் 70* ரன் விளாசினர்.

177 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை-ஏ அணி கடைசி நாளான நேற்று 209 ரன்னுக்கு சுருண்டது. அஷென் பண்டாரா 87 ரன், கேஷரா நுவந்தா 26, திலும் சுதீரா 21, அஞ்சலா பண்டாரா 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

இந்தியா-ஏ பந்துவீச்சில் குர்னூர் பிரார் 12.3 ஓவரில் 68 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். சரன்ஷ் 2, ஆகிப் நபி, யஷ் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 33 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா-ஏ அணி 6.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 36 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதுடன் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags : India A ,Galle ,Sri Lanka A ,Sri Lanka ,
× RELATED கனடாவை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ