பிலடெல்பியா: பராகுவே அணியுடனான ரவுண்ட் ஆப் 16 போட்டியில், கேப்டன் கிலியன் எம்பாப்பே அடித்த பெனால்டி கோலால் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. பிலடெல்பியா அரங்கில் நடந்த இப்போட்டியில், பிரான்ஸ் அணி வீரர்கள் பந்தை துல்லியமாகக் கடத்திச் சென்று பராகுவே கோல் பகுதியை முற்றுகையிட்டு தொடர் தாக்குதல் நடத்தினாலும்… எதிரணியின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை. குறிப்பாக, கோல் கீப்பர் ஆர்லாண்டோ கில்லை தாண்டி கோல் அடிப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.
இதனால், இடைவேளை வரை 0-0 என சமநிலையே நீடித்தது. இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் வீரர்கள் தாக்குதல் நட த்துவதும், பராகுவே அதை முறியடிப்பதுமாகவே ஆட்டம் தொடர்ந்தது.பராகுவே வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதும் பிரான்ஸ் தரப்பை மேலும் கடுப்பாக்கியது. இந்த நிலையில், 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கிலியன் எம்பாப்பே மின்னல் வேகத்தில் கோல் அடிக்க, பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நேரம் முடியும் வரை மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. ஜூலை 10ம் தேதி பாஸ்டன் அரங்கில் நடக்க உள்ள காலிறுதியில் பிரான்ஸ் மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
முரட்டு ஆட்டம் எங்களுக்கும் தெரியும்…
பிரான்ஸ் அணியால் நளினமாக, ஒழுங்காக மட்டும் தான் விளையாட முடியும் என்று நினைத்துவிட்டார்கள் போல. எதிரணியின் வியூகத்திற்கேற்பவே எங்கள் ஆட்டமும் இருக்கும். அவர்கள் முரட்டு ஆட்டத்தை நம்பினார்கள். எங்களுக்கும் அது தெரியும் என்பதை காட்டிவிட்டோம். வெற்றி தான் முக்கியம். அதிலும் நாங்கள் தான் சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டோம். – கிலியன் எம்பாப்பே
கை குலுக்காததால் கடுப்பான கோல் கீப்பர்
பிரான்ஸ் அணியுடனான போட்டி முடிந்ததும் கிலியன் எம்பாப்பே உடன் கை குலுக்குவதற்காக தனது கையை நீட்டினார் பராகுவே கோல் கீப்பர் ஆர்லாண்டோ கில். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த எம்பாப்பே தங்கள் அணியின் வெற்ற்றியை கொண்டாடுவதிலேயே கவனமாக இருந்தார்.
இதனால் கடுப்பான கில், பந்தை எம்பாப்பே பின்புறமாக எறிந்துவிட்டு களத்தில் இருந்து கிளம்பினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கில், ‘நான் எம்பாப்பே உடன் கை குலுக்கவே விரும்பினேன். ஆனால், அவரது கவனம் என் மீது திரும்பவே இல்லை. அதனால் சற்று உணர்ச்சிவசப்பட்டு எனது கட்டுப்பாட்டை இழந்தேன்… அவ்வளவு தான். அதன் பிறகு அமைதியாகிவிட்டேன்’ என்றார்.
