×

திருப்பதி கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் 14, 17ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி வரும் 14 மற்றும் 17ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி வழிபாடு நடைபெறும் நாட்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில், கோயில் முழுவதையும் தூய்மை செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி பழைய கணக்கு முடித்து புதிய கணக்கு தொடங்கும் நிகழ்வான ‘ஆனி வார ஆஸ்தானம்’ வரும் 17ம்தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி வரும் 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. ஆழ்வார் திருமஞ்சனம் காரணமாக அன்றைய நாளில் காலை 6 மணி முதல் 11 மணி வரை சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. பின்னர் தூய்மைப்பணி முடிந்து சிறப்பு பூஜைகளுக்கு பின், பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் 14 மற்றும் 17ம்தேதிகளில் விஐபி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக வரும் 13 மற்றும் 16ம்தேதிகளில் விஐபி தரிசனம் தொடர்பான எவ்வித பரிந்துரை கடிதங்கள் பெறப்படாது. அதேபோல் வரும் 17ம்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாராதனை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

24 மணி நேரம் காத்திருப்பு;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 90,546 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,303 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.93 கோடி காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு 4.61 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.54 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் சிலா தோரணம் வரை சுமார் 3கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரமாகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Aniwara ,Asthanam ,Tirupathi Temple ,Thirumalai ,Tirupathi Elumalayan Temple ,Asthanathiota ,Yukati Festival ,Aniwara Asthanam ,Annual Brahmorshavam ,Vaikunda Ekadashi Worship ,
× RELATED இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மீது...