×

சமூக விரோதிகள் அட்டகாசம்; மது பாராக மாறிய சமுதாய கூடம்: பொதுமக்கள் அச்சம்

 

சிவகாசி: சிவகாசி முஸ்லீம் தைக்கா தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிவகாசி மாநகராட்சி 37வது வார்டு முஸ்லீம் தைக்கா தெருவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த நிலையில் சுகாதார வளாகம் இருந்தது. அதனை இடித்து விட்டு புதியதாக சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2024-2025ம் ஆண்டில் ரூ.40 லட்சமும், 2025-2026ம் ஆண்டில் ரூ.13.30 லட்சமும் என மொத்தம் ரூ.53.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.

சிவகாசி முஸ்லீம் பள்ளிக்கூடம் அருகே உள்ள இந்த சமுதாய கூடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. சமுதாய கூடம் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் சுப நிகழ்ச்சிகள் பயன்பாட்டிற்கு கொண்டு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக கழிப்பறை கட்டுமான பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட இந்த சமுதாயக்கூட கட்டிடம் தற்போது இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குடிமகன்கள் இந்த புதிய கட்டிடத்தை இரவு நேர பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

கட்டிடம் முழுவதிலும் மது அருந்தும் டம்ளர்களும் குடிநீர் பாக்கெட்களும் நிறைந்து காணப்படுகிறது. மேலும் ஆங்காங்கே மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. இது தவிர மற்ற சமூக விரோத செயல்களும் இங்கு நடந்தேறி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சமுதாயக்கூடம் வழியாக செல்வதை பொதுமக்கள் தவிர்க்கின்றனர். பகல் நேரங்களில் சமுதாய கூடம் வாசலில் வாலிபர்கள் போதையில் அமந்திருப்பதால் பள்ளி மாணவிகள் அச்சமுடன் செல்கின்றனர். போதை ஆசாமிகள் போதை தலைக்கேறிய நிலையில் சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கதவுகளை உடைத்துள்ளனர்.

எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த சமுதாய கூடத்தை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமுதாய கூடத்தை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் நபர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Sivakasi ,Muslim Taikka Street ,Ward 37 ,Sivakasi Corporation ,
× RELATED விட்டு விட்டு பெய்யும் மழையால்...