6 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து காத்திருக்கிறார்கள் புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்..? தமிழகம் முழுவதும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்து சுமார் 6 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 34,911 ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், மற்றும் துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. 2 கோடியே 28 லட்சத்து 41 ஆயிரத்து 335 குடும்ப அட்டைகள் தற்போது உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 7 கோடி பேர் பயன் அடைந்து வருகிறார்கள்.

ரேஷன் கார்டுகள் மூலமே அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுவதால் அதனை வாங்குவதில் தீவிரமாக உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தலுக்காக மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் இன்னும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த 6 மாதமாக புதிய ரேஷன் கார்டு கிடைக்காமல் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 21,000 மனுக்கள் தவிர மற்ற அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனையில் உள்ளன. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களிலும் மேலும் சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை துறைக்கு வந்து உள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் மேலும் 3 லட்சம் பேர் விண்ணப்பித்த படிவங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து 7 வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரே எண் கொண்ட வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தால் புதிய கார்டு வழங்குவது சிரமம். இதனால் புதிய ரேஷன் கார்டுகள் குறித்த ஆய்வு விசாரணை முழுமையாக மேற்கொண்டு அதனை முறைப்படுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படும். அதனால் தாமதம் ஏற்படுகிறது என்றார்.

தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து 2 மாதம் ஆன பிறகும் புதிய ரேஷன் கார்டு வழங்காததால் பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Related Stories: