நெல்லை அருகே தந்தை, மகன் கொலை பின்னணி; 20 ஆண்டு தொடர் பகையால் 9 பேர் கொலை: 11 பேரை பிடிக்க 6 தனிப்படை தீவிரம்

வீரவநல்லூர்: நெல்லை அருகே தந்தை, மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியாக 20 ஆண்டு தொடர் பகையால் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கொலை கும்பலை சேர்ந்த 11 பேரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (40), தனது மகன்கள் சின்னதுரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் உறவினர் தோட்டத்தில் வேலைக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 11 பேர் கும்பல் திடீரென்று பைக் மீது காரை மோதச் செய்து சரமாரியாக அரிவாளால் வெட்டி காளிமுத்துவை கொலை செய்தது. இதில் 5 வயது மகனும் கொல்லப்பட்டான். காளிமுத்துவின் தலையை 5 கி.மீ., தூரம் எடுத்துச் சென்று கரம்பை ரோட்டில் வைத்து விட்டு கும்பல் தப்பியது.

போலீசார் நடத்திய விசாரணையில் கல்லிடைக்குறிச்சி, மூலச்சியைச் சேர்ந்தவர் பெருமாள்பாண்டியன். இவர் பாமக ஒன்றிய செயலாளராக இருந்தார். இவரது தங்கை அந்தோணியம்மாளின் மாமனார் அதே பகுதியைச்சேர்ந்த சித்திரபுத்திரன் (72). கடந்த 2006ம் ஆண்டு பெருமாள்பாண்டியனின் மனைவிக்கும், சித்திரபுத்திரனின் மகன் சுப்பிரமணியனின் மனைவிக்கும் இடையே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்தப்பகை விருட்சமாகி, விஸ்வரூபமெடுத்தது. 2007ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி சுப்பிரமணியனை, பெருமாள்பாண்டியன் தரப்பினர் கொலை செய்தனர். இதற்கு பழிக்குப் பழியாக பெருமாள்பாண்டியன் தரப்பில் சுப்பையா, சின்னதம்பி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக சித்திரபுத்திரன் மகன்கள் பெருமாள், பாபநாசம், மருமகன் குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். 2012ல் பெருமாள்பாண்டியன் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் காளிமுத்து, அவரது 5வயது மகன் ஜெயராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 20 ஆண்டு பகையில் இதுவரை 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டைக்கொலையை அரங்கேற்றிய மூலச்சியைச் சேர்ந்த சிவகுருநாதன் மகன்கள் மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன், பெருமாள்பாண்டியன் மகன்கள் அருள், மணி, பட்டுராஜா, கிருஷ்ணன் மகன் கந்தன், மூக்காண்டி மகன் ராஜதுரை, ராசையா மகன்கள் சுபாஷ், மகேந்திரன், வெள்ளப்பாண்டி மகன் தங்கதுரை ஆகிய 11 பேரை பிடிக்க நெல்லை எஸ்பி விஸ்வேஸ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை: எஸ்பி
நெல்லை மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி நேற்று மூலச்சி கிராமத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தந்தை, மகன் இரட்டை கொலை தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை முடிவில் கைது நடவடிக்கை இருக்கும். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கைக்கு பின் பெயர் விவரங்கள் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: