திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கடந்த ஆண்டு காரில் சென்று ஆடு திருடிய வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டுள்ளது வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஞ்சலா, கணவனை இழந்தவர். இவர் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், அஞ்சலா வளர்த்து வந்த ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், தான் வளர்த்து வந்த ஆடுகளை காணவில்லை என்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, வாணியம்பாடி அம்பலால் நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவர், திருமலை என்பவருடன் சேர்ந்து, காரில் அஞ்சலாவின் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாணியம்பாடி நகர போலீசார், வழக்கறிஞர் சுல்தான், திருமலை ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஆடு திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, வழக்கறிஞர் ஷேக் சுல்தான், திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், சிவில் வழக்குகள் தொடர்பாக அரசு தரப்பில் வழக்காடுவதற்காக, முதன்மை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கறிஞர் ஷேக் சுல்தான் மற்றும் திருமலை ஆகியோர்கள் மீதான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக வருகிற 22ம் தேதி வழக்கறிஞரை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றத்தின் சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆடு திருடிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்ட அரசு அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக, வழக்கறிஞர் ஷேக் சுல்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இது திருப்பத்தூர் நீதிமன்ற வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
குற்றப்பின்னணி உள்ளவரை நியமிப்பதா?
சமுதாயத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டதாக, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நீதிபதியின் தீர்ப்புக்கு முன்னர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளும் பொறுப்புள்ள பணியை மேற்கொள்பவர்கள் வழக்கறிஞர்கள். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அமைக்கப்பட்ட மேன்மையான பணியை மேற்கொள்பவர்கள் வழக்கறிஞர்கள். இத்தகைய வழக்கறிஞர் பணியை அரசு தரப்பில் வாதாட பணி ஆணை வழங்கப்படும்போது அதை சார்ந்த வழக்கறிஞரின் குற்ற பின்னணியை சரியாக விசாரணை மேற்கொண்டு அரசு தரப்பில் பணி ஆணை வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லையேல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
