×

சீன ஆப்ஸ் பயன்பாட்டால் வந்த வினை; ‘ப்ளூடூத் ஆப்’ மூலம் ஓடும் ‘இ-ரிக்‌ஷா’-வை முடக்கும் கும்பல்: வடமாநிலங்களில் திக்குமுக்காடும் ஓட்டுநர்கள்

புதுடெல்லி: சீன செல்போன் ஆப் மூலம் இ-ரிக்சாக்களை முடக்கி ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் மோசடி குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் குறைந்த விலையிலான இ-ரிக்சா மற்றும் மின்சார ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படும் சீன தயாரிப்பு பேட்டரி மேலாண்மை அமைப்புகளில் (பிஎம்எஸ்) உள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, செல்போன் ஆப் மூலம் வாகனங்களை முடக்கி பணம் பறிக்கும் அதிர்ச்சி பின்னணி வெளிவந்துள்ளது. சீனாவின் ஷென்சென் கிரெனர்ஜி டெக்னாலஜி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘பேட்-பிஎம்எஸ்’ என்ற செல்போன் ஆப்பில் கடவுச்சொல் பாதுகாப்பு இல்லாததால், 10 முதல் 15 மீட்டர் சுற்றளவில் உள்ள வாகனங்களின் பேட்டரி இணைப்பை மர்ம நபர்கள் ப்ளூடூத் மூலம் துண்டித்து விடுகின்றனர்.

சமூக ஊடகங்களில் வேடிக்கைக்காக துவங்கப்பட்ட இந்த விளையாட்டு, தற்போது தினக்கூலி ஓட்டுநர்களை ஏமாற்றி 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை சட்டவிரோதமாக பணம் பறிக்கும் மோசடியாக மாறியதை அடுத்து, மத்திய பிரதேச போலீசார் மற்றும் குற்றப்பிரிவினர் நடத்திய கூட்டு விசாரணையில் வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல்கள் குறித்து ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இதற்கிடையே, இ-ரிக்சா ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை இந்த மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடனடியாக பேட்டரி டீலர்களை அணுகி, தொழிற்சாலையிலேயே அமைக்கப்பட்டிருக்கும் எளிய கடவுச்சொல்லை மாற்றி வலுவான பாதுகாப்பு எண்ணை அமைக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் இணைப்பை அணைத்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு அதிகாரிகள், ‘சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : New Delhi ,Union government ,India… ,
× RELATED ‘பாஜக ஒழிக’, ‘அமித்ஷா ஒழிக’ கோஷ...