×

பூந்தமல்லி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களால் வருவாய் இழப்பு: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மோதல் போக்கால் பணிகள் பாதிப்பு

 

பூந்தமல்லி: சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி, ஆந்திரா, கர்நாடகா, புதுவை போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் வடமாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு வருவதற்கு நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளூர் பகுதிவாசிகள் மட்டுமன்றி வெளியூர்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் வந்து கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக ஏராளமானோர் தங்கியுள்ளனர். பூந்தமல்லியை சுற்றி கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பூந்தமல்லி வேகமாக வளர்ந்து வருகிறது. பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 60 ஆயிரம் பேர் இங்கு வசித்தனர்.

அதன்பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் மக்கள் தொகை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம், வளர்ச்சிக் கேற்ப பூந்தமல்லியில் போதுமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்பவும், தொழில் வளர்ச்சிக்கேற்பவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவேண்டும் என்பதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படாமலும் வரன்முறை இல்லாமலும் கட்டப்படும் கட்டிடங்களால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. புதிய கட்டடங்கள் கட்டவோ அல்லது பழைய கட்டடங்களில் மாறுதல் செய்யவும் நகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும்.

தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு தான் நகர், ஊரமைப்பு துறையான டிடிசிபி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ., ஆகியவை புதிய கட்டடங்களுக்கான திட்ட அனுமதி வழங்கும். இதில், குறிப்பிட்ட அளவுக்கான கட்டடங்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கும். டிடிசிபி., – சிஎம்டிஏ., அமைப்புகள் திட்ட அனுமதி வழங்கும் இடங்களிலும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளே உரிமம் வழங்கும். இந்நிலையில், உரிய முறையில் வரைபடம் தயாரித்து திட்ட அனுமதி பெறாமல் யாரும் கட்டடங்கள் கட்டக்கூடாது. அப்படி யாராவது கட்டடங்கள் கட்டினால், அந்த கட்டடங்கள் சீல் வைக்கப்படும், தேவை அடிப்படையில் அந்த கட்டடங்களை இடிக்கவும், உள்ளாட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வாங்கியவர்கள், அதனை உருவாக்கியவர்கள் நகராட்சி அலுவலகத்தில் உரிய முறையில் விண்ணப்பித்து கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் பூந்தமல்லி பைபாஸ் சாலை, குமணன்சாவடி மாங்காடு சாலை, டிரங்க் ரோடு மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகம், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருகின்றன. நகராட்சி பணியாளர்கள் சென்று கட்டடம் கட்டும் உரிமையாளரிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பேசி அனுப்பி விடுகின்றனர்.

சில இடங்களில் நகராட்சி பணியாளர்களை மிரட்டியும் அனுப்புகின்றனர். நகராட்சி அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே உரிய ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் இல்லாததால் பல்வேறு பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டடங்களை உதாரணம். இப்படி அனுமதி இன்றி கட்டப்படும் கட்டடங்களில் பல உயர் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் செல்வாக்குள்ள பிரமுகர்கள் கட்டடமாக இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இதனால் நகராட்சிக்குத்தான் வருவாய் இழப்பு பெருமளவில் ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது அனுமதி இன்றி கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்த கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்படும் பட்சத்தில் சீல் வைப்பதுடன் அபராதம் விதிக்கப்படும், என்று தெரிவித்தார். மேலும், வரி வசூலிலும் நகராட்சி பணியாளர்கள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. வரி வசூலில் சாதாரண மக்களிடம் கடமை காட்டும் நகராட்சி பணியாளர்கள் வசதியான அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு சாதகமாக முறையற்ற வகையில் வரி வசூலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வரிவசூல் மூலம் நகராட்சிக்கு வர வேண்டிய வருவாயிலும் இழப்பு ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே நகராட்சி அதிகாரிகளுக்கும், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை இல்லை. இதனால் பல இடங்களில் நகராட்சி அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையே ஆங்காங்கே மோதல் போக்கு இருந்து வருகிறது.

அனுமதி இன்றி கட்டப்படும் கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் உயர் அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் பணியாளர்கள் பற்றாக்குறை மக்கள் பிரதிநிதிகளுடன் மோதல் போக்கு போன்ற காரணங்களால் நகராட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், நகராட்சிக்கான வருவாய் இழப்பும் அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பூந்தமல்லி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Poonamallee Municipality ,Poonamallee ,Chennai ,Andhra Pradesh ,Karnataka ,Puducherry ,Tamil Nadu ,
× RELATED பெரியபாளையம் அருகே கன்னிகைபேரில்...