தஞ்சாவூர், ஜூலை 3: மும்முனை மின்சாரம் போதிய அளவு வழங்காததால் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து மோட்டார் மூலம் பயிர்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. தஞ்சையில் நெல், வாழை, தென்னை, கரும்பு, கடலை மக்காச்சோளம், எள், காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. இருப்பினும் அதிகப்படியாக நெல் தான் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் தற்போது குறுவை சாகுபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேட்டூர் அணையில் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் சாகுபடி பரப்பளவு குறையும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
ஒரு சில பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா இடையிருப்பு அருகே உள்ள மணப்படுகை கிராமத்தில் மின்மோட்டார் மூலம் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது போதிய அளவு மும்முனை மின்சாரம் வராததால் மின்மோட்டார்கள் இயங்காத நிலையில் நெற்பயிர்கள் மற்றும் பருத்தி செடிகள் காய்ந்து கருக தொடங்கி உள்ளது. தண்ணீரின்றி கருகும் பயிர்களையும், பருத்தி செடிகளையும் காப்பாற்ற விவசாயிகள் சிலர் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து மோட்டார் மூலம் வாய்க்கால்களில் உள்ள தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். ஜெனரேட்டரை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 4 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.
அதுமட்டுமன்றி ஜெனரேட்டருக்கு வாடகை வழங்க வேண்டும். இதனால் ஏக்கருக்கு ரூ.1,400 வரை தினமும் கூடுதல் செலவாகிறது. இதே நிலை நீடித்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வீணாகி வருகிறது. தமிழக அரசு கருகும் பயிர்கள் மற்றும் பருத்தி செடிகளை காப்பாற்ற தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர்.
