நாகப்பட்டினம், ஜூலை 3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும். இதன்படி இந்த கூட்டம் வரும் 28ம்தேதி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைப்பெறவுள்ளது.
மாதந்தோறும் ஒருமுறை நடைபெறும் ஆர்டிஓ தலைமையிலான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதி மாதம் முதல் செவ்வாய் கிழமை நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறும். வேதாரண்யம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை வேதாரண்யம் ஆர்டிஓ அலுவலகத்திலும் நடைப்பெறும். இந்த முகாம்கள் நடப்பு மாதம் முதல் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் அரசு விடுமுறை தினங்களில் வந்தால் மாற்றியமைக்கப்பட்ட முகாம் நாள் குறித்த விவரம் தெரிவிக்கப்படும்.
எனவே இந்த சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை நகல், மற்றும் தற்போதைய புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் மனுக்களாக வழங்கி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
