மும்பை: டெல்லியில் பருவமழை காரணமாக இன்று காலை பல இடங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியின் என்சிஆர் பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. வானம் மேகமூட்டத்துடனும், மிதமான மழை பொழிவு அல்லது பலத்த காற்று வீசும் என்று அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்தது. இதனால், மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் மழை பொழிகிறது. ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மும்பை, தானே, ராய்கட் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.குறிப்பாக பால்கர் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கன முதல் மிக கனமான மழை பெய்யும் என்றும், ஆங்காங்கே பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
