×

அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ எச்சரிக்கை

 

தஞ்சை: இனிமேல் நடைபெறக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை தாசில்தார் அகத்தியன், தனி வட்டாட்சியர் (சமூக நலம்) சுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் சார்பில் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் முருகேஸ்வரி, எலும்பு முறிவு மருத்துவர் சீனிவாசன், பொது மருத்துவர் பிரசன்னா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறைவான அதிகாரிகளே கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் சார்பில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம், டிசம்பர் 3 இயக்க மாவட்டத் தலைவர் பஹாத்முகமது, மாவட்ட பொருளாளர் சுதாகர், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் அஷ்ரப், ஒன்றிய செயலாளரும், நியமன கவுன்சிலருமான ஆனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் நல்லதம்பி, மாவட்ட மகளிரணி தலைவி ரேவதி, பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத்துறை, பொதுத்துறை, தனியார் துறைகளில் உள்ள வணிக வளாகம், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், ஜவுளிக்கடைகள், உணவகங்கள் ஆகிய இடங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் மற்றும் கழிவறை வசதி, சக்கர நாற்காலி ஆகியவை இருக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி உரிமைச் சட்டமும் உண்டு, தமிழ்நாட்டின் அரசு உத்தரவு உண்டு. இருந்தும் பல வருட காலமாக கோரிக்கை வைத்தும் இது அமல்படுத்தாமல் உள்ளது. உடனடியாக அமல்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் புது ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்துதர வேண்டும்.

காவல்துறையில் மாற்றுத்திறனாளிகள் விபத்தில் சிக்கினாலோ அல்லது குடும்பப் பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டாலோ, மாற்றுத்திறனாளியை தாக்கினாலோ உரிமைச் சட்டம் 2016 பிரிவு92ன் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று சட்டம் இருந்தும், காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகள் புகார் கொடுத்தால் வழக்குப் பதிவு செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள். மாற்றுத்திறனாளி சங்கங்கள் தலையிட்டால்தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். தனி ஒரு மாற்றுத்திறனாளி புகார் கொடுத்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் இருந்தும் அவர்களுக்குரிய சலுகையை வழங்காமல் நடத்துனர்கள் தவறுதலான வார்த்தைகளை கூறி மாற்றுத்திறனாளி மனதை புன்படுத்தி கீழே இறக்கி விடுகின்றனர்.

மேலும் பேருந்தில் பயணிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளின் மீது நடத்துனர்கள் அத்துமீறுகின்றனர் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் சார்பில் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் முருகேஸ்வரி ஊன்றுகோல் வழங்கினார். கூட்டத்தின் முடிவில் பேசிய வருவாய் கோட்டாட்சியர் சங்கர், உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் நடைபெறக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டங்களுக்கும் அனைத்துத்துறை அதிகாரிகளும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு வராதபட்சத்தில் நிச்சயமாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தின் முடிவில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை வருவாய் கோட்டாட்சியர் சங்கரிடம் வழங்கினர்.

Tags : R. D. Oh ,Thanjay ,Khudir ,D. Oh ,Taluka Office Complex ,Tanjai District ,Patukkot ,
× RELATED ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்...