×

ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள்: கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் பரபரப்பு

 

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய ஆவூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட கலெக்டர் கவிதா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ரவியுடன் இணைந்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் கவிதா, `திருவள்ளூர் மாவட்டத்தில் 9வது கட்டமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2.78 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. கோமாரி நோய் காற்றில் பரவும் பாதிப்பு உள்ளதால் கால்நடைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போடப்பட வேண்டும். அனைத்து கிராமப்புறங்களுக்கும் நடமாடும் மருத்துவர்கள் குழு அட்டவணை அமைத்து சுழற்சி முறையில் சென்று வருகின்றனர்.

பொன்னேரி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆரணி ஆற்றில் கொட்டுவது தொடர்பான புகார் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் கால்நடைகளை திரிய விடுவது தொடர்பாக கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்’ என கூறினார். இதனிடையே நிகழ்ச்சி முடிந்து புறப்பட தயாராக இருந்த மாவட்ட கலெக்டரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை மர்ம நபர்கள் சிலர் வெட்டுவதாகவும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஏரியிலிருந்து அதிக அளவில் மண் அள்ளப்படுவதாகவும், ஏரியிலிருந்து சட்ட விரோதமாக மண் கடத்தும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர். அதற்கு, அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் உறுதியளித்தார். இந்த முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kori Collector ,BONNERI ,DISTRICT COLLECTOR ,KAVITA ,RAVI ,AAUUR VILLAGE ,MEENCHUR UNION ,`Thiruvalllur ,
× RELATED பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில்...