×

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் சேவை பாதிப்பு

 

திருப்பூர், ஜூலை 2: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதியஅளவு மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் வெளியூர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருவதால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நகரான திருப்பூரில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முதல் தேர்வாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் உள்ளன. அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், முக்கியச் சிறப்புச் சிகிச்சை நிபுணர்கள் எண்ணிக்கை பற்றாக்குறையாகவே உள்ளது. போதிய அளவு மருத்துவர்கள் இல்லாததன் காரணமாக இங்குள்ள பயிற்சி மருத்துவர்கள் கூடுதல் பணியை எதிர்கொள்கின்றனர். கடந்த காலங்களில் உள்ளூர் தொழில்துறையினரின் பங்களிப்போடு, அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன. ஆனால், தற்போது இத்திட்டம் குறித்த அரசின் முடிவு என்னவென்று தெரியாததால் புதிய உபகரணங்கள் வாங்குவதிலும், அதனை மேம்படுத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. உள் நோயாளிகளாக தினந்தோறும் 900 பேர் வரையிலும், புறநோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், இதய நோய் சிகிச்சைப் பிரிவில் ஒரு சில மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டுமே வழங்கி, பெரும்பாலான நேரங்களில் ஆன்ஜியோகிராம், ஆன்ஜியோபிளாஸ்ட் போன்ற அவசரச் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு அல்லது, கோவை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதேபோல், நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் குடல் நோய் ஆகிய முக்கியப் பிரிவுகளுக்கான மருத்துவர்கள் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இருக்கும் சில மருத்துவர்களே சிப்ட் முறையில் பணிபுரிவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு சில நேரங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலையும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தலைக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்ககூடிய நரம்பியல் நிபுணர்கள், சாதாரண வயிற்றுப் புண், அல்சர் மற்றும் தீவிர குடல் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் நாள்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாத ஏழை மக்கள், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்கு வந்தால் அவசரக் காலங்களில் கோவையை நோக்கியே செல்ல வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாததால் பெரும்பாலும் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் தொழிலாளர்களிடம் வீண் அலைகழிப்பும், வீண் விரையமும் ஏற்படுகிறது. குறிப்பாக இருதய சிகிச்சைக்கு இசிஜி, எக்கோ டெஸ்ட் ஆகியவை மட்டும் எடுக்கின்றனர். அடுத்த கட்ட பரிசோதனையாக ஆஞ்சியோ டெஸ்ட் உள்ளிட்டவை கோவை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

எனவே திருப்பூரில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்பவும் அரசு மருத்துவமனையில் பயன்படும் பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மிக முக்கிய சிகிச்சைகளான இருதயம், தலைக்காயம், சிறுநீரகம், நரம்பியல், வயிறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை பார்க்கும் வகையில் கூடுதல் சிறப்பு மருத்துவர் நியமணம் செய்வதோடு அதற்கேற்ற வகையில் நவீன உபகரணங்களையும் அதிகரிக்க வேண்டும். அதேபோல் காலை நேரங்களில் புறநோயாளிகள் மருந்து வாங்குவதற்கு நீண்ட நெடிய வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. அதனை தவிர்க்க கூடுதல் மருந்து வழங்கும் இடங்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரப்பில் கூறுகையில், கடந்த மாதம் ஆய்வுக்கு வந்து சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் மருத்துவர்கள் தேவை மற்றும் உயர்சிகிச்சைக்கான உபகரணங்கள் குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மருத்துவர்கள் நியமணம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதுவரையிலும் வரும் பயனாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனை பிரதான கட்டிடத்தின் மேல் தளத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags : Tiruppur Government Medical College Hospital ,Tiruppur ,Tamil Nadu government ,
× RELATED குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு