புதுடெல்லி: நாடு முழுவதும் ‘விபி- ஜி ராம்-ஜி’ திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஒன்றிய அரசுக்கு பணிந்ததால் தமிழ்நாட்டுக்கு ரூ.5,057 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும், அதேபோல் மாநில அரசுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கான கூலிச் செலவை 100 சதவீதம் ஒன்றிய அரசும், பொருள் செலவை 75:25 என்ற விகிதத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டன.
இதன்மூலம் ஒட்டுமொத்த நிதி பகிர்வு 90:10 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால், ஒன்றிய அரசின் ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் – கிராமின்’ (விபி-ஜி ராம்-ஜி) திட்டம் நேற்று முதல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த ‘விபி-ஜி ராம்-ஜி’ திட்டத்திற்கு எதிராக, கடந்த ஜனவரி 23ம் தேதி அப்போதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்த போதிலும், தற்போது இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் முறைப்படி அமல்படுத்துவதற்கான தடைகளை விஜய் தலைமையிலான தவெக அரசு நீக்கியுள்ளது.
இந்நிலையில் இதற்கான 23 பக்க வழிகாட்டு நெறிமுறைகளை, மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் பிரசாந்த் எம்.வாட்நேரே மாநில அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தின் செயல்பாடுகளை வழிநடத்தவும், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை கண்காணிக்கவும் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவான உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதை தவிர்த்து, தனிநபர்களின் நிலங்கள் அல்லது வீட்டுமனைகளில் சொத்துக்களை உருவாக்குவதற்கு இந்த வழிகாட்டுதல்கள் முன்னுரிமை அளிக்கின்றன.
இதில் பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், நாடோடி மற்றும் அறிவிக்கப்பட்ட பழங்குடியினர், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் இலக்கு பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய விபி-ஜி ராம்-ஜி திட்டத்தில் அனைத்து செலவுகளுக்கும் 60:40 என்ற புதிய நிதி பகிர்வு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசின் நிதிப் பொறுப்பு பெருமளவில் மாறியுள்ளதுடன், பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு தினசரி குறைந்தபட்ச அடிப்படை கூலியாக 300 ரூபாயை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் அனைத்து மாநிலங்களுக்குமான தேசிய சராசரி தினசரி கூலி 327.4 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கான ஒட்டுமொத்த செலவு 12,642 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கட்டாய 60:40 நிதிப் பகிர்வு விகிதத்தின்படி, ஒன்றிய அரசு தன் பங்காக 7,585 கோடி ரூபாயை வழங்குகிறது;
தமிழக அரசு தனது சொந்த மாநில பட்ஜெட்டில் இருந்து 5,057 கோடி ரூபாயை நேரடியாக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 40 சதவீதம் நிதிப் பங்களிப்பை வழங்குவதற்காக, தமிழக அரசு தனது சொந்த மாநில பட்ஜெட்டில் இருந்து 5,057 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட சுமார் 4,000 கோடி ரூபாய் கூடுதல் மற்றும் எதிர்பாராத செலவை தமிழக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மற்ற மாநில அரசுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
புதிய சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட விதிகளை மாநில அரசு அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், அதிகாரிகள், தேவையின் அடிப்படையில் நிதி பெற்றுத் தந்த பாதுகாப்பு வளையம் தளர்ந்து, மாநில வாரியாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கடுமையான பட்ஜெட் உச்சவரம்பாக இது மாறும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு கிடைக்கும் நிதி ஒதுக்கீடு குறையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையே, 16வது நிதி ஆணையத்தின் அளவுருக்கள் இறுதி செய்யப்படும் வரை உடனடியாக நிதிக்குறைப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இடைக்கால ஒதுக்கீடாக ரூ.7,585 கோடியை வழங்கியுள்ளார்.
இது கடந்த ஆண்டு ஒன்றிய அரசு வழங்கிய தொகையை விட வெறும் 120 கோடி ரூபாய் மட்டுமே குறைவாகும். இந்த புதிய திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வாரம் ஒருமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வேலைக்கான வருகை பதிவேடு மூடப்பட்ட 15 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு சட்டப்பூர்வமாக தானியங்கி நிதி இழப்பீடு பெற உரிமை உண்டு.
அதே நேரத்தில், உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையை தடுக்கும் வகையில், தீவிர விவசாய காலங்களில் வேலைவாய்ப்பு பணிகளை 60 நாட்கள் நிறுத்தி வைக்க மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த 60 நாட்களை, அந்தந்த மாவட்டங்களின் பயிர் சுழற்சிக்கு ஏற்ப பல பகுதிகளாக பிரித்துக் கொள்ள வழிகாட்டுதல்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* எதிர்த்த மாநிலங்கள் பணிந்தன
ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தகவல்படி, ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அனைத்து மாநிலங்களும் இறுதியில் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு தங்களை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன. மொத்தம் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதற்கான பட்ஜெட் நிதியை ஒதுக்கியுள்ளதுடன், 24 மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்கேற்ற திட்ட வழிகாட்டுதல்களை முழுமையாக இறுதி செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளன.
இச்சட்டத்தை அமல்படுத்த எந்த மாநிலமும் முழுமையாக மறுக்கவில்லை என்றாலும் பஞ்சாப், தமிழகம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் தொடக்கத்தில் தங்களது சட்டமன்றங்களில் கடுமையான எதிர்ப்பு தீர்மானங்களை நிறைவேற்றியும், நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவித்தும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
மேலும், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் 60:40 என்ற நிதிப் பகிர்வு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் வெளிப்படையாக வலியுறுத்தின. அம்மாநிலங்கள், ‘கூலிச் செலவை முழுமையாக ஒன்றிய அரசே ஏற்று பழைய திட்ட முறையில் இருந்து மாறியிருப்பது, எங்களது மாநில கருவூலங்களுக்கு நியாயமற்ற, கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்’ என்று வாதிட்டபோதிலும், இறுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டு அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
