×

முதல்வர் பிறந்தநாள் நலத்திட்ட உதவி என கூறி இலவச ரேஷன் அரிசியை மக்களுக்கு வழங்கிய தவெகவினர்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார்

மதுரை: மதுரை, விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவாஜி உள்ளிட்ட சிலர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் பங்கேற்றனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனு: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி விளாங்குடி பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மேற்கு தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் தலா 5 கிலோ வீதம் ஆயிரம் பேருக்கு அரிசிப்பை வழங்கப்பட்டது. இந்த பையில் இருந்தது ரேஷன் அரிசி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியை மொத்தமாக வாங்கி, தலா 5 கிலோ பைகளாக்கி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி என்ற பெயரில் வழங்கியுள்ளனர். அரசியல் கட்சி சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளில் ரேஷன் அரிசி வழங்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்களுக்கு அரசு வழங்கும் இலவச அரிசியை, அரசியல் விளம்பரத்திற்காக பொதுமக்களிடம் கொடுத்து அவர்களை ஏமாளிகளாக்கும் வகையில் தவெகவினர் செயல்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்க வேண்டிய இலவச அரிசியை, தவெகவினருக்கு மொத்தமாக கொடுத்தது யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் முழுமையாக தடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர். இந்த மனு அளிக்க வந்தபோது தவெகவினர் வழங்கிய அரிசிப்பை மற்றும் ரேஷன் அரிசியை கொண்டு வந்து கலெக்டர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் காண்பித்தனர்.

Tags : Chief Minister ,Madurai ,Sivaji ,Vilangudi ,Tamil Nadu ,Vijay ,
× RELATED முகம் சிதைத்து, கை மணி கட்டுகளை அறுத்து இளம்பெண் படுகொலை