×

புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது சிறப்பு விரைவு நீதிமன்றம்!

புனே: புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை சிறப்பு விரைவு நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த மே 1ஆம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், 60 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஏற்கனவே 2 வழக்குகளில் இருந்து தப்பியதாக தெரிவித்த நீதிபதி, அவரிடம் குற்ற உணர்ச்சியோ, திருந்துவதற்கான அறிகுறியோ தெரியவில்லை எனக்கூறி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், நஸ்ராபூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமராவ் காம்ப்ளே (65). இவர் கடந்த மே 1ஆம் தேதி தாய் வழி உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பிறகு சிறுமியை குடும்பத்தினர் தேடிய போது அவரது உடல் மாட்டுத் தொழுவத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நஸ்ராபூரில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரினர். இதனையடுத்து சம்பவம் நடந்த அன்றே குற்றவாளி பீமராவ் காம்ப்ளேவை போலீசார் கைது செய்தனர். மேலும் 16 நாட்களுக்குள் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிமன்றம் மே 28ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. ஜூன் 20ம் தேதி இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. ஜூன் 25ம் தேதி முதியவர் காம்ப்ளேவை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முதியவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நீதிமன்றம் தனது உத்தரவில், கடைசியாக இருவரையும் ஒன்றாகப் பார்த்தது மற்றும் வலுவான சூழ்நிலை ஆதாரங்கள் மூலம் முதியவர் குற்றம் இழைத்ததை அரசுத் தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. குற்றவாளியின் செயல் கொடூரமானது, மனிதாபி மானமற்றது, காட்டுமிராண்டித் தனமானது. இக்குற்றம் நீதிசார் மனசாட்சியை மட்டுமல்லாமல், பொது மக்களின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Tags : Pune ,
× RELATED மேற்கு வங்கம்: பெட்ரோ கெமிக்கல் ஆலை...