×

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் உயர்வு: தட்கலுக்கு ரூ.5,000 ஆக நிர்ணயம்

புதுடெல்லி: வெளிநாடு செல்ல பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்படுகின்றன. இந்த புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய பாஸ்போர்ட் / புதுப்பிப்பதற்கான கட்டண விவரம்: 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 15 முதல் 18 வயது வரையிலான பிரிவினர் 36 பக்கங்களை கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், விரைவாகப் பெறும் தட்கல் முறைக்கான கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான சாதாரணக் கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் முறைக்கான கட்டணம் ரூ.6,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட்டை சாதாரண முறையில் பெற ரூ.5,000, தட்கல் முறையில் பெற ரூ.7,500 வசூலிக்கப்படும்.

இதனையடுத்து 60 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் ரூ.6,000ம், தட்கல் முறையில் ரூ.8,500ம் கட்டணம் செலுத்த வேண்டும். 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க சாதாரண முறையில் ரூ.1,750-ம், தட்கல் முறையில் ரூ.4,250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். சிறார்களின் பாஸ்போர்ட் தொலைந்து போனால் மாற்று பாஸ்போர்ட் பெற சாதாரண முறையில் ரூ.4,250-ம், தட்கல் முறையில் ரூ.6,750-ம் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடத்தக்கது.

Tags : Dadkal ,New Delhi ,Ministry of Foreign Affairs of the Union ,
× RELATED 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தகுதி