கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பா: 1,300 பேர் உயிரிழப்பு

ஐரோப்பாவில் நிலவி வரும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக 1300 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பிரான்சில் மட்டும் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத தீவிர வெப்ப அலை மக்களை பெரும் சுகாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. பல நாடுகளில் வெப்ப அலை 40டிகிரி செல்ஸியஸை தாண்டி உள்ளதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெப்பம் தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்தால் ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்பட கண்டம் முழுவதும் கடும் வெப்பம் வெளுத்து வாங்கியது.

ஜெர்மனியில் 41.7 டிகிரி, செக் குடியரசில் 41.01 டிகிரி, போலந்தில் 40.5 டிகிரி பதிவாகியுள்ளது. பிரான்சில் மின்விசிறி, கூலர், குளிர்சாதன பெட்டி விற்பனை செய்யும் கடைகளுக்கு மக்கள் படையெடுத்து முட்டி மோதி பொருட்களை வாங்கி செல்லும் காட்சிகளும் அரங்கேறி உள்ளன. வெயில் பாதிப்புகளால் பிரான்சில் மட்டும் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் முதியவர்கள். ஜெர்மனி, ஸ்பெயினில் வெயில் கொளுத்தி வருவதால் கடல், ஆறு, ஏரி, நீச்சல் குளம் என அனைத்து நீர்நிலைகளிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குளிர்பானங்கள், பழரசங்கள் விற்பனை மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. வெயிலின் தாக்கத்தால் ஹங்கேரி அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் வெப்ப அலை பரவலாக 40 டிகிரியை தாண்டியதால் பல்வேறு நகரங்களில் மக்கள் மீது குளிர்ந்த நீர் தெளிக்கும் வாகன அமைப்புகளை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. இதனிடையே பிரான்சில் வெப்பத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் உயர நீர்நிலைகளுக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இதனிடையே கடந்த 27ம் தேதி பிரான்ஸ் மக்களை மகிழ்விக்கும் வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பிரான்சில் உள்ள ஈபெல் கோபுரத்தை மின்னல் தாக்கியது. ஜூன் 21 முதல் ஐரோப்பிய நாடுகளில் கடும் வெயில் மற்றும் வெப்பம் சார்ந்த காரணங்களால் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார மையம். இதில் பிரான்சில் பலியானவர்கள் மட்டும் ஆயிரத்துக்கும் மேல் என தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகும். ஐரோப்பா கண்டம் உலக சராசரியை விட 2 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக எச்சரித்துள்ளார்.

இதனிடையே வரும் வெள்ளிக்கிழமை முதல் மேற்கு ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை குறைய தொடங்கும் என்றும், பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டனில் சில பகுதிகளில் படிப்படியான குளிர்ச்சி போக்கை கொண்டுவரக்கூடும் என்றும் பன்னாட்டு ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இருப்பினும் கிழக்கு ஐரோப்பா தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories: