திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 30: திருக்காட்டுப்பள்ளி அருகே குடிநீர் முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருக்காட்டுப்பள்ளி அருகே பழைய ஆற்காடு மாதா கோவில் தெருவில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று பூதலூர் செங்கிப்பட்டி சாலை சேவுகடை அருகில் ஆண்கள், பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் சி.பி.ஐ. மாவட்ட குழு உறுப்பினர் காந்தி சி.பி.எம் மாவட்ட செயற்குழு அபிமன்னன் ஒன்றிய செயலாளர் சி.பி.ஐ. ஸ்ரீதர், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பூதலூர் ஆய்வாளர் கலைவாணி, திருக்காட்டுப்பள்ளி உதவி ஆய்வாளர் சூர்யா, ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அங்கு வந்த பூதலூர் தாசில்தார் விவேகானந்தன், பூதலூர் ஊராட்சி ஒன்றிய பிடிஓ (கி.ஊ) பொற்செல்வி ஆகியோர் ஆற்காடு கிராமத்திற்கு நேரடியாக சென்று மாதா கோவில் தெருவில் உள்ள குடிநீர் பிரச்னையை சரி செய்ய சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
