×

துணை வேந்தர்கள் நியமிக்க அரசுக்கு அதிகாரம் தரும் சட்டத்தை எதிர்த்த வழக்கில் ஜூலை 29ல் இறுதி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டத்தை எதிர்த்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு மே மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற கோடை கால சிறப்பு அமர்வு, தமிழக அரசின் இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தடையை நீக்கியதுடன் பிரதான வழக்கை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிர்வாக வசதிக்காக மாநில அரசுக்கு வழங்கியதை பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு முரண்பாடானது என்று கூறமுடியாது.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை பின்பற்றியே துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். பல்கலைக்கழகங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றியதன் காரணமாக கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் பதில் மனுவுக்கு, விளக்கம் அளித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென மனுதாரர் தரப்பிலும், பல்கலைக்கழக மானியக் குழு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் அனைத்து தரப்பினரும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Chennai ,Madras High Court ,Tamil Nadu… ,
× RELATED தனிநபர்கள் தலையீடு இருக்காது...